403.

    பொன்னார் புயனார் புகழும் புகழார்
        புலியி னதளார் புயநாலார்
    தென்னார் சடையார் கொடிமேல் விடையார்
        சிவனார் அருமைத் திருமகனார்
    என்னா யகனா ரென்னுயிர் போல்வார்
        எழின்மா மயிலார் இமையோர்கள்
    தந்நா யகனார் தணிகா சலனார்
        தனிவந் திவண்மால் தந்தாரே.

உரை:

     பொன்னிறம் கொண்ட தோளையுடைய பிரமதேவன் புகழும் புகழ் கொண்டவரும், புலித்தோலுடையும் நான்கு தோள்களையும் அழகிய சடையும் கொடியில் எழுதப்பட்ட எருதையு முடைய சிவபிரானுடைய அருமைப் புதல்வராகிய முருகப் பெருமான், எனக்கு நாயகராய், என்னுயிர் போல்பவராய், அழகிய மயிலூர்தி யுடையராய், தேவர்கட்கும் தலைவராய்த் தணிகை மலையை யுடையராயினும் தனியே இங்குப் போந்து அறிவைக் கலக்கும் காதல் மயக்கத்தை யுண்டு பண்ணிவிட்டார்; என்ன செய்வேன், எ.று.

     பிரமன், பொன்னிறம் கொண்டவராதலால், “பொன்னார் புயனார்” என்கின்றார். பொன் னென்பது திருமகளையும் குறித்தலால், வெற்றித் திருமகளைத் தோளிலே யுடைய திருமால் எனவும் கொள்ளலாம். அதள் - தோல். புயம், புயன் என வந்தது. நாலார் - நான்குடையவர். தென் - அழகு. விடை யெழுதிய கொடியுடைய ரென்றற்குக் “கொடி மேல் விடையார்” எனக் கூறுகின்றார். ஆன்ம நாயகனாதல் தோன்ற, “என் நாயகனார்” என்றும், அன்புறவு விளங்க, “என்னுயிர் போல்வார்” என்றும் இயம்புகின்றார். தேவ சேனாபதியாய்த் தேவருலகைக் காத்தமையால், “இமையோர்கள் தம் நாயகனார்” எனக் குறிக்கின்றார். தணிகாசலம் - தணிகைமலை. மங்கை யொருத்தியின் மனம் கொள்ள வருபவர் பிறர் காணச் சுற்றமும் துணைவரும் சூழ் தர வாராராதலால், “இவண் தனிவந்து மால் தந்தார்” என்று உரைக்கின்றார். மால் ஈண்டுக் காதலின்ப வேட்கை.

     இதனால், தமக்கு அருளியற் காதல் மயக்கத்தை முருகப் பெருமான் தந்தமை கூறியவாறாம்.

     (4)