404. கல்லா லடியார் கல்லடி யுண்டார்
கண்டா ருலகங் களைவேதம்
செல்லா நெறியார் செல்லுறு முடியார்
சிவனா ரருமைத் திருமகனார்
எல்லா முடையார் தணிகா சலனார்
என்னா யகனா ரியல்வேலார்
நல்லா ரிடையென் வெள்வளை கொடுபின்
நண்ணார் மயின்மே னடந்தாரே.
உரை: கல்லால மரத்தின் கீழிருப்பவரும், சாக்கிய நாயனா ரெறிந்த கற்களை மலராக ஏற்றுக் கொண்டவரும், உலகங்களை ஆக்கியவரும், வேதங்கள் சென்றறியாத சைவ நெறியை யுடையவரும், மின் போன்ற சடை முடியை யுடையவருமாகிய சிவபிரானுடைய அருமைப் புதல்வராய், எல்லாமுடைய செல்வராய்த் தணிகைமலைக் குரியராய், அழகிய சத்திவேலை யேந்துபவராய், எனக்கு நாயகருமாகிய முருகப் பெருமான் மகளிர் நடுவண் இயலும் என்னுடைய சங்கு வளைகளைக் கவர்ந்து கொண்டு மயிலேறிச் சென்றவர் பின்பு வாரா ராயினரே, என் செய்வேன்? எ. று.
கல்லாலின் கீழ் சீகண்ட முதல்வனாய் வீற்றிருந்து சனகர் முதலிய நால்வர்க்கு அறம் உரைத்த வரலாறு குறித்துக் “கல்லால் அடியார்” என்றும், சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபட்டமை நினைந்து, “கல்லடி யுண்டார்” என்றும் கூறுகின்றார். சிவ பரம்பொருள் படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினான் என்பது கொண்டு, “கண்டார் உலகங்களை” என்கின்றார். “நீலமேனி வாலிழை பாகத் தொருவன் இருதாள் நிழற் கீழ், மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே” (ஐங்குறு) எனப் பெரியோர் கூறுவது காண்க. வேதங்கள் உலகியற் குரிய வைதிக ஒழுக்க நெறிகளை யுரைப்பன வாதலால் “வேதங்கள் செல்லா நெறியார்” என வுரைக்கின்றார். “உலகியல் வேத நூல் ஒழுக்க மென்பது” (பெரியபு. ஞான) என்று சேக்கிழார் உரைப்பதறிக. செல் - மின்னல். சிவன் முடியிற் சடைமின் போல்வது கொண்டு, “செல்லுறும் முடியார்” என்கின்றார். “மின்னியல் செஞ்சடை வெண்பிறையன்” (புனவா) என ஞானசம்பந்தர் கூறுவர். உலகுயிர்க ளனைத்தும் உடைமையாகவும் அடிமையாகவு முடையா ராதலால், “எல்லா முடையார்” என வுரைக்கின்றார். மகளிரிடையே இருக்கின்ற தன்னை முருகனைத் தனியே கண்ட போது காணாமல், அவன் மறைந்த பின் கண்டு தன் கைவளை யில்லாமை அலர் விளைவிக்கு மென அஞ்சுகின்றமை தோன்ற, “நல்லாரிடை என் வெள்வளை கொடுபின் நண்ணார்” என வெருவுகின்றாள். நண்ணுவரேல் கைவளை நெகிழும் நிலை எய்தாது என்பது கருத்து. முருகன் விரைந்து சென்றதை, “மயில் மேல் நடந்தார்” எனக் குறிக்கின்றாள்.
இதனால், தனிமையிற் கண்ட முருகப் பெருமான் பின்னும் பின்னும் வந்து கூடல் வேண்டும் என்னும் வேட்கை புலப்படுத்தியவாறாம். (5)
|