405.

    காரூர் சடையார் கனலார் மழுவார்
        கலவார் புரமூன் றெரிசெய்தார்
    ஆரு ருடையார் பலிதேர்ந் திடுமெம்
        அரனார் அருமைத் திருமகனார்
    போரூ ருறைவார் தணிகா சலனார்
        புதியார் எனவென் முனம்வந்தார்
    ஏரூர் எமதூ ரினில்வா என்றார்
        எளியே னேமாந் திருந்தேனே.

உரை:

     கங்கை நீர் தங்கிய கடையை யுடையவரும், நெருப்புப் பொருந்திய மழுவை ஏந்துபவரும், பகைவரது புர மூன்றையும் எரித்தவரும், திருவாரூரை யுடையவரும், மனை தோறும் சென்று பலியேற்பவருமாகிய சிவபெருமானுடைய அருமைப் புதல்வரான முருகப் பெருமானார் திருப்போரூரிலும் தணிகை மலையிலும் எழுந்தருள்வார் ஆயினும், புதியவர்போல் என் முன்பு வந்து உரையாடி எமது அழகிய ஊர்க்கு வருக என்றாராக, எளியனாகிய யான் அது கேட்டு ஏமாந்து இருந்தொழிந்தேன்; இனி வருவாரா? எ.று.

     கார் - தண்ணீர்; தண்ணீரை யுடைய மேகம் நிறம் கரிதாகிக் கார் எனவும் கார்முகில் எனவும் வழங்கும். ஈண்டு நீராவது கங்கை நீர்ப் பெருக்கு. நெருப்பின் நிறமும் ஒளியு முடைமை பற்றி மழுப்படை, “கனல் மழு” எனப்படுகிறது. ஆரூர் - திருவாரூர்; “ஆரம் பாம்பு வாழ்வது ஆரூர்” (ஓணகாந்) என நம்பியாரூரர் இங்கிதமாகக் கூறுவர். பலி - பிச்சை. “காரிரும் பொழிற் கச்சி மூதூர்க் காமக் கோட்டம் உண்டாக நீர் போய் ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே” (ஓணகாந்) என்பதும் காண்க. போரூர், முருகப் பெருமான் கோயில் கொண்டருளும் ஊர்களில் ஒன்று. எப்போதும் நினைவில் வரும் உருவொடு வாராது புத்துருக் கொண்டு போந்தமை விளங்கப் “புதியார் என என் முனம் வந்தார்” என்றும், அவரோடு அளவளாவினேனாக, எமது ஊர்க்கு வருக; அது மிக்க அழகுடையது என்பாராய், “ஏரூர் எமதூரினில் வா என்றார்” என்றும் இயம்புகின்றாள். ஏர் அழகு. இனி, ஏர் ஊர் என்பதை ஏரகம் என்னும் ஊர் எனக் கொண்டு, ஏரகமாகிய எமது ஊர்க்கு வருக என்றார் என வுரைத்தலும் ஒன்று. இவ்வாறு இரு பொருள்பட மொழிந்து நுண்ணறிவில்லாத என்னை மயங்க வைத்தார்; யான் ஏமாந்து போனேன் என்பாளாய், “எளியேன் ஏமாந்திருந்தேனே” என இசைக்கின்றாள். ஏமார்ந்திருந்தேன் என்பது ஏமாந்திருந்தேன் என மருவிற் றென அறிக. “இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன் என்றென்று ஏமார்ந்திருப்பேனை, அருங் கற்பனை கற்பித் தாண்டாய்” (கோயி. மூத்த) என மணிவாசகர் வழங்குவது காண்க. ஏம் - மயக்கம்; “ஏமுற்றவரினும் ஏழை” (குறள் 873) என வரும்.

     இதனால், புதியராய் வந்து ஏரூர் எமது ஊரினில் வா என்றது கேட்டு ஏமாந்தமை றியவாறு.

     (6)