406. கண்ணார் நுதலார் விடமார் களனார்
கரமார் மழுவார் களைகண்ணார்
பெண்ணார் புயனார் அயன்மாற் கரியார்
பெரியார் கயிலைப் பெருமானார்
தண்ணார் சடையார் தருமா மகனார்
தணிகா சலனார் தணிவேலார்
எண்ணார் எளியா ளிவளென் றெனையான்
என்செய் கேனோ இடர்கொண்டே.
உரை: கண் பொருந்திய நெற்றியும், விடக்கறை கொண்ட கழுத்தும், மழுவேந்திய கையு முடையராய், அன்புடையார்க்குக் களைகண்ணானவராய், பெண்ணாகிய உமையம்மையின் தோளை ஒரு கூறாகவுடையவராய், பிரமன் திருமாலாகிய இருவரும் காண்டற் கரியராய், பெருமை யுடையராய், கயிலை மலையை யுடைய பெருமானாய், குளிர்ந்த சடையை யுடையவராய் விளங்கும் சிவபெருமான் பெற்ற மகனும், தணிகை மலையை யுடையவரும் ஒப்பற்ற வேற்படையை ஏந்துபவருமாகிய முருகப் பெருமான் என்னை எளியவள் என்று கருதித் தமது திருவுள்ளத்தில்
ஏற்கத் தக்கவளென எண்ணாதொழிகுவராயின், மிக்க துயருற்று என்ன செய்வேன் ! எ.று.
கண்ணார் நுதல் - கண் பொருந்திய நெற்றி; “கண்பரவு நெற்றிக் கடவுட் சுடரான்” (பாதிரிப்) என்றும், “கண்ணார் நுதலாய்” (பாதிரிப்) என்றும் நாவுக்கரசர் உரைப்பர். களம் - கழுத்து; களன் என வந்தது போலி; அறம், அறன் என வழங்குதல் போல. களைகண் - ஆதரவு. இடப்பாகம் உமையம்மையின் கூறாதல்பற்றிப் “பெண்ணார் புயன்” எனக் குறிக்கின்றார். மக்களும் தேவரும் செயற்கரியவற்றை எளிதிற் செய்வதுபற்றிப் “பெரியார்” எனச் சிவனைச் சிறப்பிக்கின்றார். கயிலை மலையைப் பெரிதும் விரும்புபவன் என்பதனால், “கயிலைப் பெருமானார்” என்கின்றார். கங்கை தங்குதலால், “தண்ணார் சடையார்” என வுரைக்கின்றார். எளிமை, ஈண்டு நுண்ணறிவின்மை குறித்தது. அதனையுடையாரை மறவார் என்பாளாய், “எளியள் இவள் என்றெனை எண்ணார்” என்றும், எண்ணாது மறப்பராயின், யான் எய்தக் கடவ வருத்தம் பெரிதாம் என்றற்கு, “இடருற்று” என்றும், அதனாற் செய்வகையொன்றும் புலனாகா தென்பாள், “யான் என் செய்கேனோ” என்றும் நினைவுற்று எதிர்பெய்து பரிகின்றாள்.
இதனால், தன்னை எண்ணாது மறந்த வழி என் செய்வது என எதிர்பெய்து வருந்தியவாறாம். (7)
|