407. மழுவார் தருகைப் பெருமான் மகனார்
மயில்வா கனனார் அயில்வேலார்
தழுவார் வினையைத் தணியா ரணியார்
தணிகா சலனார் தம்பாதம்
தொழுவா ரழுவார் விழுவா ரெழுவார்
துதியா நிற்பா ரவர்நிற்கப்
புழுவார் உடலோம் பிடுமென் முனர்வந்
தருள்தந் தருளிப் போனாரே.
உரை: மழுப்படை யேந்திய கையையுடைய சிவபெருமானுடைய மகனாகிய முருகப் பெருமானார் மயில் வாகனமும் கூரிய வேற்படையும் உடையராய்த் தன்னை அன்பாற் கொள்ளாதவரைச் சூழ்ந்து வருந்தும் வினைகளின் வெம்மையைக் குறைக்க மாட்டராக, வளங்களால் அழகு நிறைந்த தணிகை மலையில் தன் திருவடிகளைத் தொழுவாரும், அன்பு மிக்கு அழுவோரும் விழுவோரும் எழுவோரும் துதிப்போருமாகிய அன்பர்கள் வறிதே நிற்கப் புழு நிறைந்த உடம்பைப் பேணி யொழுகும் என் முன்பு போந்து திருவருளின்பம் தந்து போயினார்; எப்பொழுது வருவாரோ? எ. று.
மழு ஆர்தருகை எனக் கொள்க. வாகனம் - ஊர்தி . அயில் - கூர்மை. தழுவுதல், ஈண்டு அன்பு கொள்ளுதல் மேற்று. செய்வினைகள் தம் பயனை நுகர்வியாது கழிவதில்லை யாயினும், முருகப் பெருமான் திருவருளால் தீப்பயனின் வெம்மை தணிந்து கெடுமாதலால், “தழுவார் வினையைத் தணியார்” என எதிர்மறை வாய்ப்பட்டால் வற்புறுத்துகின்றார். அணியார் தணிகை - பல்வளத்தால் உண்டாகும் அழகுடைய தணிகைமலை. அப்பெருமான்பால் அன்பு மிகுந்து தொழுதலும் அழுதலும் திருவடியில் விழுதலும் எழுதலும் திருப்பெயரைச் சொல்லித் துதித்தலும் செய்யும் மெய்யன்பர்கள் பலர் திருவருளை வேண்டி நிற்கின்றார்கள் என்றற்குத் “துதியா நிற்பாரவர் நிற்க” எனுவும், அவ்வாறின்றிப் புழுமலிந்த உடலை யோம்பி, உள்ளத்தே அருளின்ப மொன்றையே நினைந்து கிடந்த என் முற்போந்து அருள் புரிந்து நீங்கி விட்டார்; எப்போதும் என்னைப் பிரியாமல் உடனிருத்தலை யன்றோ யான் வேண்டுகிறேன்; அவர் எப்பொழுது வருவாரோ என ஏங்கும் மனமுடையராவது புலப்பட, “என் முனர் வந்து அருள் தந்தருளிப் போனாரே” எனவும் உரைக்கின்றார்.
இதனால் அருள்பெற்றும் ஆராமை தெரிவித்தவாறாம். (8)
|