408.

    நிருத்தம் பயின்றார் கடனஞ் சயின்றார்
        நினைவார் தங்கள் நெறிக்கேற்க
    அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர்
        அறுமா முகனா ரயில்வேலார்
    திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத்
        திருமா மலையார் ஒருமாதின்
    வருத்தம் பாரார் வளையும் தாரார்
        வாரா ரவர்தம் மனமென்னே.

உரை:

     திருவம்பலத்தில் நடம் புரிபவரும், கடலில் எழுந்த நஞ்சினை யுண்டவரும், மறைகளின் பொருளை நினைப்பவர் மேற்கொண்ட நெறிக் கொப்பப் பொருளுரைத் தருள்பவருமாகிய சிவபெருமானுக்கு அரிய புதல்வராகிய முருகப் பெருமான் ஆறுமுகமும், கூரிய வேற்படையும் உடையராய்த் திருந்திய மனமுடையவர் புகழ்ந்து பரவும் திருத்தணிகை மலையில் உள்ளவராயினும், ஒரு மானிடப் பெண்ணின் வருத்தத்தை ஏறிட்டுப் பாராமலும், அவள் கைவளையைத் தாராமலும், அவளிடம் வாராமலும் இருக்கின்றார்; அவர் திருவுள்ளந் தான் என்னையோ? அறிகிலேன்! எ.று.

     நிருத்தம் - கூத்து. அயிலுதல் - உண்ணுதல். அருத்தம் - மறைகள் உரைப்பவற்றின் உண்மைப் பொருள். மறை யோதுபவரின் தகுதிக்கும் மேற்கொண்ட நெறிகட்கும் ஒத்த வகையில் விளக்கம் தந்தமை பற்றி, “நினைவார் தங்கள் நெறிக்கேற்க அருத்தம் பகர்வார்” என வுரைக்கின்றார். “கொள்வோன் உணர்வகை யறிந்து அவன் கொள்வரக் கொடுத்தல் மரபெனக் கூறினர் புலவர்” என நூற் பொருள் உரைக்கும் ஆசிரியர்க்கு இலக்கணம் கூறுவதால், “நினைவார் நெறிக்கேற்ப அருத்தம் பகர்வார்” என்கின்றார். இங்கு “நினைவார்” என்பது மறைப் பொருளை அறிந்து கொள்ள நினைக்கும் மாணவர்களை; நெறி யென்பது, முன்பே பயின்று நினைந்தொழுகும் நெறி. “கேட்போ ரளவைக் கோட்படு பொருளால் அருளிய கலைகள்” எனச் சங்கற்ப நிராகரணம் உரைப்பது காண்க. அன்று ஆலின் கீழிலிருந்து முனிபுங்கவர்க்கு மறைப் பொருளைச் சீகண்ட முதல்வனாய் விளக்கமுரைத்த வரலாறு இங்கே நினைக்கப்படுகிறது. “நன்றாக நால்வர்க்கு நான்மறையி னுட் பொருளை, அன்றாலின் கீழிருந்தங்கற முரைத்தான் காணேடி” (சாழல்) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. கல்வி கேள்விகளால் உணர்வன உணர்ந்து சிந்தை திருந்திய பெரியோர்களைத் “திருத்தம் பெறுவார்” எனச் சிறப்பிக்கின்றார். ஒரு மாது என்றது, அருளியல் ஒன்றியத்தை விரும்பி யொழுகும் ஆன்மாவாகிய பெண்ணை, ஒன்றியம், யோகம். “அவர்தம் மனம் என்னே” என்றது, மனம் மாறி விட்டாரோ என ஐயுறுதல் குறித்ததாம். இத்தகைய கூற்றுக்களை ஐயம் செய்தல் என்பர் தொல்காப்பியர் (மெய்ப்).

     இதனால் முருகனது அருளின்பம் பெற்ற ஆன்ம நாயகி ஆராவின்பத்து அவன் பிரிவாற்றாமை கூறியவாறாம்.

     (9)