409.

    பிரமன் தலையிற் பலிகொண் டெருதில்
        பெயரும் பிச்சைப் பெருமானார்
    திரமன் றினிலே நடனம் புரிவார்
        சிவனார் மகனார் திறல்வேலார்
    தரமன் றலைவான் பொழில்சார் எழில்சேர்
        தணிகா சலனார் தமியேன் முன்
    வரமன் றவுமால் கொளநின் றனனால்
        மடவா ரலரால் மனநொந்தே.

உரை:

     பிரமன் தலையோட்டில் பலியேற்று எருதேறிச் செல்லும் பிச்சைப் பெருமானும், நிலையான அம்பலத்தில் திருக் கூத்தாடுபவருமான சிவனுக்கு மகனாரும், வெற்றி மிக்க வேற்படையை யுடையவரும், வானளாவும் சோலைகளின் செறிவால் அழகு பொருந்திய தணிகை மலையை யுடையவருமான முருகப் பெருமானார், அருள் மணவின்பம் தரற்பொருட்டுத் தமியேன் முன்பு வந்தாராகவும், ஏனைப் பெண்கள் அலர் கூறுதலால் மனம் சோர்வுற்று மயங்கி நின்றொழிந்தேன் தெளிவாக, எ. று.

     சிவன் மனைதோறும் சென்று பலியேற்கும் திருவோடு, பிரமன் தலையோடு என்பவாகலின், “பிரமன் தலையிற் பலிகொண்டு” என்கின்றார். பிச்சைப் பெருமான் - பிச்சை யேற்கும் பெருமகன். “ஆரூர் எம் பிச்சைத் தேவா என்னான் செய்கேன்” (சதகம்) என மாணிக்கவாசகர் உரைப்பது காண்க. திரம் - நிலை யுடைமை. மன்றலைத் தர என்று மாற்றுக. மன்றலைத் தரத் தமியேன் முன் வர மனம் நொந்து மால் கொள நின்றனனால் மன்ற என இயையும். மடவார் - மகளிர்; மகளிர் அலர் கூறுவ ரென்று அஞ்சி மனம் நொந்து மால் கொள நின்றனன் என்பதாம். அலர் - பழிப்புரை. மால் - மயக்கம். தனி நின்று மணம் செய்து கொள்வது பிற மகளிர் ஏச்சுரைக்கு இடமா மென எண்ணி யஞ்சியது, “தமியேன்” என்ற சொல் லாற்றலாற் பெறப்படுகிறது.

     இதனால் முருகப் பெருமான் அருள் மணம் செய்ய வந்தாராகவும் தான் மால் கொண்டு நின்று பெறா தொழிந்தமை நினைந்து வருந்தியவாறாம்.

     (10)