41.

    வேதப் பொருளே சரணம் சரணம் சரணம்
        விண்ணோர் பெருமான் சரணம் சரணம்
    போதத் திறனே சரணம் சரணம்
        புனைமா மயிலோய் சரணம் சரணம்
    நாதத் தொலியே சரணம் சரணம்
        நவை யில்லவனே சரணம் சரணம்
    காதுக் கினிதாம் புகழோய் சரணம்
        கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:

     வேதத்தின் பொருளாயவனே, தேவர்கட்குப் பெருமானே, ஞான வடிவினனே, அழகிய மயிலை வாகனமாக வுடையவனே, ஓசையின் ஒலி வடிவாகியவனே, குற்றமே யில்லாதவனே, செவியாற் கேட்டற் கினிமை தரும் புகழை யுடையவனே, கந்த சாமிக் கடவுளே உன் திருவடி எனக்குப் புகலிடமாம். எ. று.

     வேதங்கள் உரைக்கும் பொருளாகியவனாதலால் “வேதப்பொருளே” என்று விளம்புகின்றார். “மறையிடைப் பொருளர் மொட்டின் மலர்வழி வாசத்தேனர்” (வீழிமிழலை) என்று சான்றோர் உரைத்தல் காண்க. ஆன்மாக்களின் பக்குவத்துக்குத் தக்கவாறு ஞானம் அருளும் திறம் பற்றி, முருகனைப் “போதத் திறன்” எனப் புகல்கின்றார். போதம்-ஞானம். நாதம்-ஓசை. “ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே” (ஐயாறு) என்பர் திருநாவுக்கரசர். நவை - குற்றம். செவிகளிற் கேட்டவழி இன்பமும் உறுதியும் பயத்தலால் “கேட்டற் கினிதாம் புகழோய்” என்று கூறுகிறார்.

     இதனால் வேதப் பொருளும் விண்ணோர் பெருமானும் பிறவுமாகிய முருகக் கடவுளின் திருவடி புகலிடமாவது வற்புறுத்தவாறாம்.

     (41)