38. தரிசனை வேட்கை

        அஃதாவது முருகப் பெருமானைத் தணிகை மலையிற் கண்ணாரக் கண்டு களிப்பதில் உண்டாகிய வேணவாவைச் சொல்லி யின்புறுவதாகும். இதன்கண் வரும் பத்து அருட்பாவிலும் தணிகையில் முருகனைக் கண்டு வணங்கி வழிபடுவேன் என்றெழுந்த பேரவாவினால், முருகனையும் அவனைப் பெற்றளித்த சிவனையும் நினைந்துருகுவதோடு இருவருடைய அருட்செயல்கள் பலவற்றையும் பன்னிப் பரவுவதும், முருகனது பரமாந்தன்மையை எடுத்துரைத்துப் பகர்வதும் காணலாம். ஒரு பரம்பொருளையே பல சொற்களால் புகழ்ந் தோதிப் பரவுவதை ஆர்வ மொழியணி என மாறனலங்கார ஆசிரியர் கூறுவர். பாட்டுத் தோறும் “தணிகையிற் கண்டிறைஞ்சுவனே” என்பது மகுடம்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

410.

    வேல்கொளும் கமலக் கையனை எனையாள்
        மெய்யனை ஐயனை யுலக
    மால்கொளும் மனத்தர் அறிவரு மருந்தை
        மாணிக்க மணியினை மயில்மேல்
    கால்கொளும் குகனை எந்தையை யெனது
        கருத்தனை அயனரி யறியாச்
    சால்கொளும் கடவுள் தனியருள் மகனைத்
        தணிகையில் கண்டிறைஞ் சுவனே.

உரை:

     வேலேந்தும் தாமரை போன்ற கையை யுடையவனும், என்னை யாண்டருளும் மெய்ப்பொருளும், தலைவனும், உலகியல் மயக்க மிக்க மனமுடையார்க்கு அறிதற்கரிய மருந்தும், மாணிக்க மணி போல்பவனும், மயில் மேல் இவர்ந்தருளும் குகப் பெருமானும், எமக்குத் தந்தையும், என் கருத்தில் இருப்பவனும், பிரமனும் திருமாலும் அளந்தறிய மாட்டாத சால்புடைய கடவுளாகிய சிவபெருமான் பெற்ற புதல்வனும் ஆகிய முருகப் பெருமானைத் தணிகைப் பதியில் கண்ணாரக் கண்டு வணங்கி வழிபடுவேன், எ. று.

     வேல் - சத்திவேல். கமலக்கை - கமல மலர் போன்ற கை; பதுமரேகை பொருந்திய கை யெனினும் அமையும். மெய்யன் - மெய்ப் பொருளாயவன்; மெய்ம்மை யுடையவன் என்றலு முண்டு. ஐயன் - தலைவன். உலகு மாயா காரியமாதலால், அதன்கண் வாழ்வார்க்கு மயக்க முண்டாவது இயல்பாதலால், “உலக மால்கொளும் மனத்தர்” என்று கூறுகின்றார்; உலகிற்கு மயக்கும் பண்பில்லையாயின் வாழ்க்கைத் துன்பங்களைக் கண்டு உயிர்கள் எளிதில் அதனினின்றும் வெறுப்பால் துறந்தொழிவர் என உணர்க; உயிர்கட்கும் உடம்பைப் பேணுதற் கண் மிக்க விருப்பமிராதாம். “துன்பம் உழத்தொறும் காதற் றுயிர்” (குறள்) எனச் சான்றோர் ஓதுதற்குக் காரணம் இம்மயக்கம் தான் என அறிதல் வேண்டும். இம்மயக்க வுணர்வு உண்மை யறிவை மறைத்தலால் திருவரு ளுணர்வாலன்றிப் பெற முடியாத ஞானப் பொருளாகிய முருகனை, “மால் நோயாய் வருத்துதலின், ஞானத்தை அதனை நீக்கும் மருந்தென்பா ராயினர். “காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன், நாமம் கெடக் கெடும் நோய்” (குறள்) எனத் திருவள்ளுவர் கூறுவது காண்க. மாணிக்க மணியின் செம்மை நிறமும் ஒளியும் உடையனாதல் பற்றி, “மாணிக்க மணி” எனப் புகழ்கின்றார். கால் கொளல் - கால் வைத்து ஏறுதல். குகன், முருகனுடைய சிறப்புப் பெயர்களில் ஒன்று; அன்பரது மனமாகிய குகையில் தங்குபவன் என்பது பொருள். கருத்தன் - கருத்தை ஆள்பவன்; “என் மனக்கருத்தை ஆளும் அங்கணன்” (கோலக்கா) என நம்பியாரூரர் கூறுவர். இதனை வடசொற் றிரிபாகக் கொண்டு தலைவன் என்றும் கூறுப. பாச பசு ஞானங்களால் அறியப் படாத கடவுள் சிவபெருமான் என்றற்கு, “அயன் அரி அறியாச் சால்கொளும் கடவுள்” என மொழிகின்றார். பிரமனைப் பாச ஞானத்துக்கும் திருமாலைப் பசு ஞானத்துக்கும் உருவாக உரைப்பர். பாச ஞானம், கல்வி கேள்வியா லெய்தும் நூலறிவு. பசு ஞானம், இயற்கை உயிரறிவு. பதி ஞானம், திருவருளால் உளதாகும் உண்மை அறிவு. சால்பு, சால் என ஈறு குறைந்தது. சால் கொளும் எனக் கொண்டு நிறைந்த என்பதும் உண்டு. தனியருள் மகன் - தனித்து நின்று அருளுருவாய்ப் பெற்ற மகன்.

     இதனால், முருகப் பெருமானைத் தணிகைப் பதியிற் கண்டு களிக்கும் பேறு நினைந்து மகிழ்ந்துரைத்தவாறாம்.

     (1)