411. கண்ணனை யயனை விண்ணவர் கோனைக்
காக்கவைத் திட்டவேற் கரனைப்
பண்ணனை யடியர் பாடலுக் கருளும்
பதியினை மதிகொள்தண் ணருளாம்
வண்ணனை யெல்லா வண்ணமு முடைய
வரதனீன் றெடுத்தருள் மகனைத்
தண்ணனை யெனது கண்ணனை யவனைத்
தணிகையிற் கண்டிறைஞ் சுவனே.
உரை: திருமால் பிரமன் இந்திரன் ஆகிய தேவர்களைக் காத்தற் பொருட்டுக் கொண்ட வேலை ஏந்தியும் கையை யுடையவனும், பண்ணவனும், அடியவர் பாடும் பாட்டுக்கு இரங்கி யருளும் தலைவனும், அறிவொளி அருளும் தண்ணிய திருவருளே யுருவாயவனும், எல்லாத் தலைமைப் பண்புகளையு முடைய வரதனாகிய சிவபிரான் பெற்ற புதல்வனும், தண்ணிய இயல்பினனும், என்னுடைய கண் போன்றவனுமாகிய முருகப் பெருமானைத் தணிகைப் பதியில் கண்ணாரக் கண்டு தலைதாழ்த்து வணங்கி வழிபட்டு மகிழ்வேன், எ. று.
கண்ணன் - கரிய நிறமுடைய திருமால். விண்ணவர் கோன் - தேவர்கட்கரசனாகிய இந்திரன். பண்ணவன் - உலகுயிர்களை வாழப் பண்ணும் கடவுள். அடியார்கள் அன்புடன் பாடும் பாட்டுக்களை விரும்பி யேற்று அருள்பவனாதலால், “அடியவர் பாடலுக் கருளும் பதி” எனப் புகல்கின்றார். பதி - தலைவன். மதி, ஈண்டு அறிவொளி மேற்று. உள்ளத்திற் படிந்திருக்கும் இருளை நீக்கிச் செம்மை நெறி யறியும் சிந்தையை நல்குவது பற்றி, “மதிகொள் தண்ணருளாம் வண்ணன்” என வுரைக்கின்றார். “இருளாய வுள்ளத்தின் இருளை நீக்கி, இடர் பாவம் கெடுத்தேழை யேனை யுய்யத், தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன் போற், சிவபோக நெறியறியச் சிந்தை தந்த அருளாளன்” (புள்ளிருக்கு) என்று திருநாவுக்கரசர் கூறுவது காண்க. வரதன் - வரம் தருபவன். தண்ணன் - தண்ணிய இயல்பினன.்
இதனாலும் முருகனது நல்லியல்புகளைப் புகழ்ந்து அவனைத் தணிகையின் கண்டு வணங்குவதிலுள்ள விருப்ப மிகுதி தெரிவித்தவாறாம். (2)
|