412. என்னுடை யுயிரை யான்பெறும் பேற்றை
என்னுடைப் பொருளினை யெளியேன்
என்னுடைக் குருவின் வடிவினை யென்கண்
மணியினை யணியினை வரத்தை
மின்னுடைப் பவள வெற்பினி லுதித்த
மிளிரருள் தருவினை யடியேன்
தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத்
தணிகையிற் கண்டிறைஞ் சுவனே.
உரை: என்னுடைய உயிராயும் யான் பெறுகின்ற நற்பேறாயும் என்னுடைய இனிய பொருளாயும் உள்ளவனும், எளியவனாகிய எனக்குக் குரு வடிவாயிருப்பவனும், என் கண்மணி யானவனும், எனக்குச் சிறந்த அணியாயவனும், யான் பெற்ற வரம் போல்பவனும், மின்னொளியை உச்சியிற் கொண்ட பவள மலையில் தோன்றிய அருள் வழங்கும் கற்பக மரம் போல்பவனும், அடியேனுக்குத் தெய்வமும் தந்தையும் தாயுமானவனுமாகிய முருகப் பெருமானைத் தணிகைப் பதியிற் கண் குளிரக் கண்டு வணங்கி வழிபடுவேன், எ. று.
உயிர்க்குயிரா யிருந்து உணர்வு தருதலால், “என்னுடை யுயிர்” எனவும், பெறுமவற்றுள் திருவருளினும் சிறந்த பேறு வேறின்மையால், “யான் பெறும் பேறு” எனவும், அத்திருவருளினும் உறுதிப் பொருள் இல்லாமையால், “என்னுடைப் பொருள்” எனவும் முருகப் பெருமானைக் குறிக்கின்றார். தனக்குத் தாய் தந்தை குரு தெய்வம் ஆகிய நான்கும் அப்பெருமானே என்பாராய், “என்னுடைக் குருவின் வடிவினை, அடியேன் தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயை” என மொழிகின்றார். அன்புறவு தோன்ற, “என் கண்மணி” என்றும், அப்பெருமானது நினைவு சிந்தைக் கழகையும், திருவடி ஞானம் பெறற் கரும் வரமாகவும் இருத்தல் பற்றி, “அணியினை வரத்தை” என இசைக்கின்றார். சிவபிரானுடைய முடியிற் சடை மின் போலவும், மேனி பவள மலை போலவும் விளங்குதலால், “மின்னுடைப் பவள வெற்பு” என்றும், அப்பெருமான்பால் தோன்றித் தொழுதார்க்கு வேண்டும் வரமருளும் செயல்பற்றி முருகனைப் “பவள வெற்பினில் உதித்த மிளிர் அருள் தரு” என்றும் உருவகம் செய்கின்றார்.
இதன்கண், தமக்கு மாதா பிதா குரு தெய்வம் என நிற்கும் முருகனைத் தணிகையிற் கண்டு வழிபடற் கண் மிக்கு நிற்கும் ஆர்வம் புலப்படுத்தவாறு காண்க. (3)
|