413.

    பரங்கிரி யமரும் கற்பகத் தருவைப்
        பராபரஞ் சுடரினை யெளியேற்
    கிரங்கிவந் தருளும் ஏரகத் தினை
        எண்ணுதற் கரிய பேரின்பை
    உரங்கிளர் வானோர்க் கொருதனி முதலை
        ஒப்பிலா தோங்கிய வொன்றைத்
    தரங்கிளர் அருண கிரிக்கருள் பவனைத்
        தணிகையிற் கண்டிறைஞ் சுவனே.

உரை:

     திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளும் கற்பகத் தருவும், பராபரஞ் சுடரும், எளியனாகிய என் பொருட்டு மன மிரங்கி எழுந்தருளும் ஏரகத் திறைவனும், நினைப்பதற் கரிய பேரின்ப மானவனும், வலி மிக்க தேவர்கட்கமைந்த ஒப்பற்ற முதல்வனும், நிகரற வுயர்ந்த பரம்பொருளாகிய ஒன்றாயவனும், மேன்மை பொருந்திய அருணகிரிநாதர்க்கு அருள் புரிந்தவனுமாகிய முருகப் பெருமானைத் தணிகைப் பதியிற் கண்டு வணங்கி யின்புறுவேன், எ. று.

     பரங்கிரி - பரங்குன்றம். அங்கே யமர்ந்து வேண்டுவோர் வேண்டும் நலங்களைப் புரிவது பற்றிப் “பரங்கிரி யமரும் கற்பகத் தரு” என்கின்றார். பரம் - மேல்; அபரம் - கீழ். மேல் கீழ் அகம் புறம் எங்கும் பரந்தொளிரும் ஞானவொளிப் பொருள் என்றற்குப் “பராபரஞ் சுடர்” என வுரைக்கின்றார். ஏரகம் - முருகன் கோயில் கொண்டருளும் இடங்களில் ஒன்று. இது மலைநாட்டிலிருப்பது என நச்சினார்க்கினியார் முதலிய பண்டையோரும், தஞ்சை மாவட்டத்துச் சுவாமி மலையெனப் பிற்காலத்தோரும் கூறுப. முருகப் பெருமான் உணர்ந்தார்க்கும் உணர்ந்தோதுதற்கரிய பேரின்ப வடிவினன் என்று சான்றோர் கூறுதலால், “எண்ணுதற்கரிய பேரின்பு” எனக் குறிக்கின்றார். தேவ சேனாபதி என்பது விளங்க, “உரங்கிளர் வானோர்க்கு ஒரு தனி முதல்” என்கிறார். இன்ன தன்மையன் என்று அறிய வொண்ணாத ஒரு தனிப் பரம் பொருளாவ துணர்த்தற்கு, “ஒப்பிலா தோங்கிய ஒன்று” எனவும், முருகனது திருவருட் காட்கியை நேரிற் பெற்று இன்புற்றவரென அவரது வரலாறு கூறுவதனால், “தரங்கிளர் அருணகிரிக் கருள்பவன்” எனவும் கூறுகின்றார்.

     இதன் கண்ணும் முருகனது முழு முதலாம் தன்மையை நினைந்து தணிகையிற் கண்டு வணங்கி மகிழ்வேன் என உரைக்கின்றவாறாம்.

     (4)