414.

    அரும்பெறன் மணியை யமுதினை யன்பர்
        அன்பினுக் கெளிவரு மரசை
    விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும்
        விளக்கினை யளக்கரும் பொருளைக்
    கரும்பினை யென்னுட் கனிந்திடும் கனியை
        முனிந்திடா தருளருட் கடலைத்
    தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத்
        தணிகையிற் கண்டிறைஞ் சுவனே.

உரை:

     பெறுதற்கரிய மணியையும் அமிர்தத்தையும் ஒப்பவனும், மெய்யன்பர்களின் மெய்யன்புக்கு எளியனாய் முன் வந்தருளும் இறைவனும், உள்ளன்போடு விரும்புகின்ற மாதவமுடைய பெரியோர்களின் உள்ளத்தில் விளங்கும் ஞான விளக்காயவனும், எவ்வகையாலும் அளத்தற் கரிய பரம்பொரு ளானவனும், கரும்பு போல்பவனும், என்னுடைய உள்ளத்தில் கனிந் தொழுகும் கனி போல்பவனும், வெறுப்பின்றிக் கேட்குந்தோறும் அருளின்பம் வழங்குதலால் அருட் கடலாயவனும், தன்னைப் பெற்ற பரசிவத்தின்கண் கிளர்ந்து தோன்றி விளக்கமுறும் ஒளிப் பொருளாகியவனுமான முருகக் கடவுளைத் தணிகையிற் கண்ணாரக் கண்டு வணங்கி வழிபடுவேன், எ. று.

     எளிதில் யாவரும் உலகியல் மணி போலாமல் ஞானவான்களாலன்றிப் பிறரால் பெறலாகாமை தோன்ற, “அரும் பெறல் மணி” யெனவும், ஞானமிர்தம் என்றற்குப் பொதுவாக, “அமுது” எனவும் இயம்புகின்றார். அன்பெனும் பிடியுள் அகப்படும் பெருமான் எனப்படுவது பற்றி, “அன்பினுக் கெளிவரும் அரசே” என்றும், முருகனது அருள் வேண்டித் தவம் புரியும் பெருமக்களை, “விரும்பும் மாதவத்தோர்” என்றும், அவரது உள்ளமே கோயிலாகக் கொண்டு அருள் ஞானப் பேரொளி செய்வது விளங்க, “மாதவத்தோர் உள்ளகத் தொளிரும் விளக்” கென்றும் விளம்புகின்றார். பரமாய பொருள் அளவுக் கடங்காதாகலின், “அளக்கரும் பொருள்” என அறிவிக்கின்றார். உள்ளத்தே நின்று நினைவார்க்கு நினைய இனியனாதல் புலப்பட, “என்னுள் கனிந்திடும் கனியே” எனவும், வேண்டுவார் வேண்டுந் தோறும் வெறுப்பின்றி அருளின்பத்தை வழங்குகின்றமை பற்றி, “முனிந்திடாது அருள் அருட் கடல்” எனவும் பரவுகின்றார். முருகனை உலகிற்களித்தது பரசிவமாதலால் “தரும் பரசிவம்” என்றும், அதன் கண்ணில் வெளிப்படும் போதே ஓங்கொளியாய்ப் போந்தமையால், “பரசிவத்துட் கிளர்ந் தொளிர் ஒளி” யென்றும் உரைக்கின்றார்.

     இதன் கண்ணும் முருகனது பரமாந் தன்மையை விதந்து கூறித் தணிகையிற் கண்டு வணங்குவது பற்றி யெழும் ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு காணலாம்.

     (5)