415.

    மாரனை யெரித்தோன் மகிழ்திரு மகனை
        வாகையம் புயத்தனை வடிவேல்
    தீரனை யழியாச் சீரனை ஞானச்
        செல்வனை வல்வினை நெஞ்சச்
    சூரனைத் தடிந்த வீரனை அழியாச்
        சுகத்தனைத் தேன்றுளி கடப்பத்
    தாரனைக் குகனென் பேருடை யவனைத்
        தணிகையிற் கண்டிறைஞ் சுவனே.

உரை:

     காமதேவனை எரித்தருளிய சிவன் விரும்பும் திருமகனும், வெற்றிமாலை யணியும் தோளையுடையவனும், கூரிய வேற்படை யேந்தும் தீரனும், அழியாத கீர்த்தி யுடைவனும், ஞானச் செல்வனும், தீவினை நிறைந்த நெஞ்சம் கொண்ட சூரவன்மனை மாய்த்த வீரனும், கெடாத சுகத்தில் இருப்பவனும், தேன் சொட்டும் கடம்பு மாலை யணிந்தவனும், குகனென்னும் பெயரை யுடையவனுமாகிய முருகப் பெருமானைத் தணிகைப் பதியிற் கண்டு வணங்கி மகிழ்வேன், எ. று.

     மாரன் - காமவேள். சிவபிரான் மேற் கொண்டிருந்த யோகத்தைக் கலைக்க முயன்றது கண்டு தனது நெற்றி விழியிற் பிறந்த தீயால் எரித்தருளிய செயலை நினைவிற் கொண்டு, இங்கே அச்சிவபெருமானை, “மாரனை யெரித்தோன்” எனக் குறிக்கின்றார். திருமகன் - ஞானத் திருவை யுடைய மகன். வாகை - வெற்றி மாலை. வன்புகொண்டு எதிர்த்தோர் அனைவைரையும் வென்று மேம்பட்டமையால், “வாகையம் புயத்தன்” எனப் புகழ்கின்றார். வடிவேல் முருகன் ஏந்தும் வேற்படை; ஏனையோர் வேற்படை போல் கூர் மழுங்குதலும் வடிக்கப்படுதலும் இன்றி இயல்பாகவே கூரிய சத்திவேலாயினும், வேலெல்லாம் வடிக்கப்படும் இயல்பு பற்றி முருகன் வேலும் வடிவேல் எனப்படுகிறது. இதனை இயல்படை என்றும், சாதியடை யென்றும் கூறுப. தீரன் - மேற்கொண்ட வினையைக்கடை போகச் செய்து முடிப்பவன். பொன்றாப் புகழுடையவன் என்றற்கு, “அழியாச் சீரன்” என்றும், தேயாச் சுகவாழ்வுடையவன் என்றற்கு, “அழியாச் சுகத்தன்” என்றும் இயம்புகின்றார். மிக்க இளமையிலேயே, வேத மோதி வாழும் பிரமனும் அறியாத ஞானம் நிறைந்து விளங்கினமை பற்றி முருகனை, “ஞானச் செல்வன்” எனப் பாராட்டுகின்றார். நாளும் வல்வினைகளையே நினைந்தும் செய்தும் போந்த சூரவன்மாவை, “வல்வினை நெஞ்சகச் சூரன்” எனவும், அவனைக் குலத்தோடும் தொலைத்தமை விளங்கச் “சூரனைத் தடிந்த வீரன்” எனவும், இறுதியில் அவன் மாடவுருவில் நின்று பொருதானாக, அதனைத் தன் வேற்படையால் வெட்டி வீழ்த்தமையால், “தடிந்த வீரன்” எனவும் இயம்புகின்றார். “சமர சூரபன்மாவைத் தடிந்த வேற்குமரன்” (கோழம்பம்) என நாவுக்கரசரும், “சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்” (முருகு) என நக்கீரரும் கூறுவது காண்க. கடம்பு மாலை முருகற்கு அடையாள மாலை; அதனைத் “தேன் துளி கடப்பந்தார்” என்று சிறப்பிக்கின்றார். தேன் றுளிக்கும் தார் என்றது, அதனை யணியும் முதல்வன், அருள் பொழியும் கண்ணாளன் என்பதுணர்த்தற்கென அறிக. அன்பர் மனமாகிய குகையில் இருப்பவன் என்னும் பொருளதாகலின், “குகன்என் பேருடையவன்” எனப் புகன்றுரைக்கின்றார்.

     இதன்கண் முருகனுடைய வீர தீரச் செயல்களை விதந்தோதி அவனைத் தணிகையிற் கண்டு வணங்கும் மகிழ்ச்சியை எடுத்தோதியவாறாம்.

     (6)