416.

    வேதனைச் சிறைக்குள் வேதனை படச்செய்
        விமலனை யமலனை யற்பர்
    போதனைக் கடங்காப் போதனை யைந்தாம்
        பூதனை மாதவர் புகழும்
    பாதனை யுமையாள் பாலனை யெங்கள்
        பரமனை மகிழ்விக்கும் பரனைத்
    தாதனை யுயிர்க்குள் உயிரனை யவனைத்
        தணிகையிற் கண்டிறைஞ் சுவனே.

உரை:

     பிரம தேவனைச் சிறையிட்டுச் சிறைத் துன்பத்தை நுகரச் செய்த விமலனும், அமலனும், புல்லறிவாளர் கூறும் பொய்ப் போதனைகளின் பொருளாகாத மெய்ஞ்ஞான வுருவானவனும், ஐவகைப் பூதங்கள் தோறும் கலந்து நிற்பவனும், பெரிய தவ முனிவர் புகழ்ந்து பரவும் திருவடியை யுடையவனும், உமையம்மையின் புதல்வனும், எங்கள் பரமசிவனே ஞான வுரையால் மகிழ்விக்கும் பரனும், அடியார்க் கடியனாய் ஒழுகுபவனும், உயிர்கட்கு உயிர் போல்பவனுமாகிய முருகப் பெருமானைத் தணிகைப் பதியிற் கண்டு வணங்கி இன்புறுவேன், எ. று.

     வேத மோதுவதையே தொழிலாக வுடையனாதலால் பிரமனை, “வேதன்” என்றும், வேத மந்திரங்களின் முன்னர் ஓதப்படும் ஓங்காரத்தின் பொருள் தெரியாமையோடு முருகனை அவமதித்த குற்றத்துக்காக முருகப் பெருமான் அவனைச் சிறையிலிட்டுச் சிறைப்படுவார் துன்ப மெல்லாம் உறச் செய்த வரலாறு கருதிச் “சிறைக்குள் வேதனை படர்செய் விமலன்” என்றும் கூறுகின்றார். வேதனை - துன்பம். விமலன் அமலன் என்பன, மலத்தொடர்பில்லாதவன் என்னும் பொருளனவாகும். அமலன் - மலமில்லாதவன். அற்பர் - புல்லறிவாளர்; அறிவிலராய் அறிவுடையார் போல் பேசுவதும் ஒழுகுவதும் இவரது இயல்பு. அவர்களுடைய அறிவுரைகள் உள்ளீடில்லாத பொய்யுரைக ளாதலால், மெய்ம்மை பொய்ம்மைக்கண் அடங்காதாகலின், “அற்பர் போதனைக் கடங்காப் போதன்” என்று கூறுகின்றார். போதனை - அறிவுரை. போதன் - ஞானவான்; மெய்யுணர்வுடையவன் என்றுமாம். ஐந்தாம் பூதன் - ஐம்பெரும் பூதங்களினும் உள்ளுறையாய் நின்று ஆள்பவன். “பூதங்கள் தோறும் நின்றா யெனினல்லால் போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர், கீதங்கள் பாடுவர்” (பள்ளி) என மணிவாசகர் உரைப்பது அறிக. மாதவர் - தவம் புரியும் முனிச் செல்வர்; அவர்கள் ஞானத்தால் திருவடியைக் கண்டு இன்புற்றுப் புகழ்வது இயல்பாதலால், “மாதவர் புகழும் பாதன்” என்று புகல்கின்றார். எங்கள் பரமன் என்பது சிவபெருமானை. சூரியனுடைய காலை வண்ணமும் அந்தி வண்ணமும் வேறுபடினும், சூரியனாகிய பொருள் ஒன்றே யாதல் போல, அந்தி வண்ணனாகிய சிவமூர்த்தமும், இளங்காலை வண்ணனாகிய முருகன் மூர்த்தமும் வேறுபடினும், உள்ளுறு சிவம் இரண்டினும் ஒன்றேயாகும். மூர்த்த வேறுபாடு பற்றிச் சிவனைப் பரமன் என்றும், முருகனைப் பரன் என்றும் உரைக்கின்றார். இதனைத் தணிகைப் புராணமும் கந்தப்புராணமும் விரிவாகக் கூறுவது காண்க. தாதன் - அடியவன். “அடியார்க்கு அடிமை செயும் அடிமையிவன் அடிமையையே அணியாக் கொண்டான்” என்று பெரியோர் பேசுவது பற்றித் “தாதன்” என முருகனை மொழிகின்றார். உயிர்க்குயிராய் நின்று உணர்வு அளித்தல் இறை யியல்பாதலால், “உயிர்க்கும் உயிரனையவன்” எனக் கூறுகின்றார். “உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம், நிரை சேரப் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்” (வீழிமிழலை என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க.

     இதனால் முருகப் பெருமானுடைய இறைமை யியல்பு கூறி, அவனைத் தணிகையிற் கண்டு களிக்கும் மகிழ்ச்சி புலப்படுத்தவாறாம்.

     (7)