417. குழகனை யழியாக் குமரனை யட்ட
குணத்தனைக் குறித்திட லரிதாம்
அழகனைச் செந்தி லப்பனை மலைதோ
றாடல்வா ழண்ணலைத் தேவர்
கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
காலனை வேலனை மனதில்
சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
தணிகையிற் கண்டிறைஞ் சுவனே.
உரை: இளையவனும், இளமைத் தன்மை குன்றாதவனும், எண்குணமுடையவனும், இத்தகைய அழகையுடைய னெனக் குறிக்க முடியாதவனும், செந்தூரில் கோயில் கொண்டருளும் அப்பனும், குன்று தோறும் ஆடல் புரியும் தலைவனும், தேவர் கூட்டத்தில் இருப்பவனும், தண்டையணிந்த திருவடியை யுடையவனும், பிணிவகைக் கெல்லாம் எமன் போன்றவனும், வேற்படையை யுடையவனும், மனத்தின்கண் மாசு இல்லாதவர்க்கு அருள் வழங்கும் சாமிநாதனுமாகிய முருகப் பெருமானைத் தணிகைப் பதியிற் கண்டு வழிபட் டின்புறுவேன், எ.று.
குழகன் - இளையவன். “மழவும் குழவும் இளமைப் பொருள” (பிங்கலந்தை) என்று சான்றோர் கூறுப. குமரன்-குமரப் பருவ முடையவன்; குமரப் பருவம் - இளங்காளைப் பருவம். மண்ணக மக்கட்குப் போல விரைவில் முதிர்ந்து மாறும் குமரப் பருவமன்று முருகனது குமரப்பருவம் என்று காட்டற்கு, “அழியாக் குமரன்” என்கின்றார். “என்றும் இளையாய் அழகியாய்” என்று பெரியோர் புகழ்வர். எண்குணம்; தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்ப முடைமை என்பனவாம்; “இவ்வாறு சைவாகமத்துட் கூறப்பட்டது” என்று (குறள்) பரிமேலழகர் உரைப்பர். அட்ட குணத்தன் என்பதை வடநூலார் “அஷ்ட குணபஞ்சரம்” என இறைவனைக் கூறுவர். அழகே திரண்டு உருக்கொண்டாற் போல்பவனாதலால் இத்தகைய அழகு என வரையறுத்துக் காண மாட்டாமை பற்றிக், “குறித்திடல் அரிதாம் அழகன்” எனப் புகல்கின்றார். செந்தில், திருச்செந்தூர்; இது திருச்சீரலைவாய் என வழங்கப்படுவது முண்டு. குறிஞ்சி நிலக் கடவுளாதலால், குன்று தோறும் சென்று விளையாடல் முருகனுக்கு விருப்புடைய செயலாம்; இதனை நாளும் செய்தொழுகுவது தோன்ற, மலைதோறும் ஆடல்செய் அண்ணல் என்னாமல், “மலைதோறாடல்வாழ் அண்ணல்” என வுரைக்கின்றார். “குன்று தோறாடலும் நின்றதன் பண்பே” (முருகு) என நக்கீரர் நவில்கின்றார். தேவர்களுக்குத் தனிக் காப்பாளனாய் அவர்களது கூட்டத்தில் இருப்ப னெனப் புராணம் கூறுதலால், “தேவர் கழகன்” எனவும், வீரம் குறிக்கும் தண்டைக் கழலைக் காலில் அணிந்திருப்பதனால், “தண்டைக் காலன்” எனவும் இயம்புகிறார். “ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும், நம்பியே கை தொழுவன் நான்” என்று பெரியோர் பாடுவர். மக்கட்குண்டாகும் எத்தகைய பிணியும் அவனது திருவருளால் நீங்கி விடுவது விளங்கப் “பிணிக்கோர் காலன்” எனக் கூறுகின்றார்; இதனாற்றான் முருகன் திருக்கோயில்கட்கு மக்கள் திரள் திரளாகச் சென்று வழிபடுகின்றா களென அறிதல் வேண்டும். சழக்கு - குற்றம்; இது எதுகை நோக்கிச் சழகு என வந்தது. சாமிநாதன் - சாமியாகிய நாதன் என விரியும். சுவாமி மலை முருகனைச் சாமிநாதன் என்றே பெயர் கூறுவர். சிவபெருமானைச் “சாமி தாதை” எனபர் திருஞான சம்பந்தர்.
இதன்கண், முருகனுடைய பெருமைகளைச் சொல்லித் தணிகையில் அவனைக் கண்டு வணங்கும் இன்பத்தைத் தெரிவித்தவாறாம். (8)
|