418. முத்தனை முத்திக் கொருதனி வித்தை
முதல்வனை முருகனை முக்கண்
பித்தனை யத்தன் எனக்கொளும் செல்வப்
பிள்ளையைப் பெரியவ ருளஞ்சோ
சுத்தனைப் பத்தி வலைப்படு மவனைத்
துரியனைத் துரியமும் கடந்த
சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
தணிகையிற் கண்டிறைஞ் சுவனே.
உரை: முத்தி யுலகை யுடையவனும், மக்களினம் முத்தி பெறுதற்கு ஒப்பற்ற காரணமானவனும், யாவர்க்கும் முதல்வனும், முருகனும், மூன்றாகிய கண்களையுடைய பித்தனாகிய சிவனைத் தனக்குத் தந்தையெனக் கொண்ட செல்வப் புதல்வனும், பெரியோர்களின் மனத்தில் எழுந்தருளும் சுத்தனும், அன்பர்களின் பத்தியாகிய வலையில் அகப்படுபவனும், துரிய நிலையிலும் காட்சி தருபவனும், துரியாதீதத்தில் ஓங்கார வொலியாய் விளங்குபவனும், என்றும் உளதாகிய தூய ஞானச் சுடராயவனுமாகிய குமரக் கடவுகளைத் தணிகையிற் கண்டு வணங்கி மகிழ்வேன், எ. று.
வார வுலகம் எனப்படும் முத்திநிலையை யுடையவன் என்பது, தோன்ற “முத்தன்” என முருகனை மொழிகின்றார். முத்தனாயினும், முத்தி வேண்டுவோர்க்கு முத்தியையும் அதனை யடைதற்குரிய ஞானமும் நெறியுமாகிய கரணங்களையும் நல்குவதால், “முத்திக் கொரு தனி வித்து” எனவும், முத்தி வாழ்வே யன்றி ஏனை யுலக இன்ப வாழ்வும் தரும் முதல்வன் என்பாராய், “முதல்வன்” எனவும் கூறுகின்றார். இவ்வாற்றால் அவனை முதியவன் என எண்ணுதல் கூடாதென நினைப்பிப்பார், “முருகன்” என்றும், அப்பெருமான் தானே சிவனுடைய கண் வழியாகத் தோன்றி சிவமூர்த்தியைத் தனக்குத் தந்தையாகவும், தன்னையவனுக்கு மகனாகவும் கொண்டுள்ளார் என்பதுணர்த்துதற்கு, “முக்கண் பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப் பிள்ளை” என்றும் இசைக்கின்றார். பெரியவர் - பொறி புலன் வழிச் சென்று மாசுறாவாறு மனத்தை யடக்கித் திருவருட் செந்நெறியில் செலுத்தும் பெருமை யுடையவர். அவரது உள்ளம் ஞானவொளி நிறைந்து தூயதாகலின், அதன்கண் இனிய காட்சி வழங்குவது கொண்டு, “பெரியவர் உளஞ்சேர் சுத்தன்” என்று சொல்லுகின்றார். இவ்வாறு அரியகாட்சியனாயினும், எளியவரும் பத்தி செய்வரேல் அப்பத்தியை விரும்பி அவரது அகக் கண்ணிற் காட்சி தந்து இன்புறுத்துவன் என்பாராய்ப் “பத்தி வலைப்படும் அவன்” என்கின்றார். அகக்கண்ணாற் காண முயல்வார்க்குப் பொறி புலவுணர்வுடன் கூடிய சாக்கிர நிலையிலேயே, சொப்பணம் சுழுத்தி என்ற இரு நிலைகட்குக் கீழேயுள்ள துரிய நிலையிலும் காட்சி யருளுவது பற்றித் “துரியன்” எனவும், துரியத்தின் கீழதாகிய அதீதமாகிய மூலாதார நிலையில் நுண்ணிய ஓங்கார வொலியாய்க் காட்சி யருளுவது கொண்டு, “துரியமும் கடந்த சத்தன்” எனவும் உரைக்கின்றார். இங்ஙனம் காட்சி பெறும் இயல்பைச் சாக்கிரத்தே அதீதத்தைப் புரிதல் எனச் சிவப்பிரகாசம் முதலிய சைவ நூல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் துரியத்திலும் அதீதத்திலும் காட்சி யருளும் குகப் பெருமானைத் தணிகையிற் புறக்கண்ணால் கண்டு வணங்கி இன்புறுமாறு கூறியவாறாம். (9)
|