419. வள்ளயில் கரங்கொள் வள்ளலை யிரவில்
வள்ளிநா யகிதனைக் கவர்ந்த
கள்ளனை யடியார் உள்ளகத் தவனைக்
கருத்தனைக் கருதுமா னந்த
வெள்ளநின் றாட வருள்குரு பரனை
விருப்புறு பொருப்பனை வினையைத்
தள்ளவந் தருள்செய திடுந்தயா நிதியைத்
தணிகையிற் கண்டிறைஞ் சுவனே.
உரை: கூரிய வேற்படையை கையிற் கொண்ட வள்ளலும், இரவுப் போதில் வள்ளி நாயகியாரை மனையவர் அறியாவாறு கொண்டுதலைக் கழிந்த கள்வனும், அடியவர் மனத்தினுள்ளிடத்தே எழுந்தருள்பவனும், என் சிந்தையை யுடையவனாய்ச் சிந்திக்கும் சிந்தையில் ஆனந்தத் தேன் பெருகி நிற்க அருள் புரியும் ஞான குருபரனும், விருப்புடைய மலைகளை யுடையவனும், செய்வினைகள் சூழ வந்து தாக்காவாறு கெடுத்தழிக்கும் அருட் செல்வனுமாகிய முருகப் பெருமானைத் தணிகைப் பதியிற் கண்ணாரக் கண்டு வணங்கி மகிழ்ச்சி மிகுவேன், எ. று.
வள் அயில் - கூரிய வேல். கொடுமை புரிந்த அசுரர் தலைவனான சூரவன்மாவோடு வேற்படை கொண்டு தாக்கி வென்ற போது, சூர் முதல்வனை முற்றவும் அழித் தொழிக்காமல் தனக்கு மயிலூர்தியாய்த் தன் திருவடி தாங்கி வாழும் நிலைத்த இன்ப நிலையை அருளியது நினைவிற் கொண்டு “வள்ளல்” என்று சிறப்பிக்கின்றார். வள்ளி நாயகியோடு களவொழுக்க மேற்கொண்டு உடன் போக்கு நெறியில் மனையவர் அறியாமல் கொண்டுதலைக் கழிந்த செயல் வகையை யுட்கொண்டு, “இரவில் வள்ளி நாயகிதனைக் கவர்ந்த கள்ளன்” எனக் கூறுகின்றார். அடியார் - திருவடியை மனத்திடைக் கொண்டு பேணும் அன்பர். அவர்களுடைய உள்ளத்துள் இருந்து நல்லுணர்வு தருவது பற்றி, “அடியார் உள்ளகத்தவன்” எனப் புகல்கின்றார். “நானேது மறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்” (ஆனைக்கா) என்று நாவுக்கரசர் இறைவன் மனத்தின் உள்ளிருக்கும் கருத்தை யுரைப்பது காண்க. இதனையே சுருங்கிய சொற்களால், “சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி யாண்ட சிவலோகா” (பிரார்த்தனை) எனத் திருவாதவூரர் கூறுவர். கருத்தன் - சிந்தையை இடமாக வுடையவன். ஞானாசிரியனாய்ப் போந்து ஞானம் அருளினாலன்றி ஞானானந்தத்தைத் தலைப்படல் இல்லாமையால், “கருதும் ஆனந்த வெள்ளம் நின்றாட அருள் குருபரன்” எனப் புகழ்கின்றார். வினையாகிய விலங்கு அறுபட்டாலொழிய ஞானப் பேறு வாயா தென்பது பற்றி, “வினையைத் தள்ள வந்து அருள் செய்திடும் தயாநிதி” என்று சாற்றுகின்றார். “வினையால் அசத்து விளைதலால் ஞானம், வினை தீரினன்றி விளையாவாம்” (சிவ. போ) என்று மெய்கண்டார் விளம்புவது காண்க. வினை நீக்கத்துக்குத் திருவருளல்லது பிறிது யாதும் வலியுடைய தன்றாதலால் “அருள் செய்திடும் தயாநிதி” என வள்ளற் பெருமான் விளக்குகின்றார்.
இதனால், ஞானானந்தம் பெறுதற்கும், அதற்குத் தடையாகும் வினையைப் போக்குதற்கும், முதல்வன் முருக னென்ப துணர்த்தி அவனைத் தணிகையிற் கண்டு வழிபட்டு இன்புறுவேன் என வுரைத்தவாறாம். (10)
|