421.

    ஈறி லாதநின் னருள்பெற வெனக்கினும்
        எத்தனை நாட்செல்லும்
    மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே
        மயில்மிசை வரும்வாழ்வே
    தூறி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ்
        சுத்தசின் மயத்தேவே
    ஊறி லாப்பெரு நிலையவா னந்தமே
        ஒப்பிலா னருட்பேறே.

உரை:

     தூறுகளில்லாத வளவிய சோலைகள் சூழ்ந்துள்ள தணிகை மலையில் எழுந்தருளும் தூய ஞான மயமான தேவனே, மாறுபட்ட குணஞ் செயல்களில்லாத நல்லோர் மனத்தின்கண் விளங்கித் தோன்றும் சோதியே, மயில் மேல் இவர்ந்து வரும் வாழ் முதலே, விரும்புவார்க்கு ஊறு செய்யாத பெரு நிலைப் பேரானந்தமே, ஒப்பொருவரு மில்லாத சிவ பெருமானுடைய திருவருட் செல்வமே, முடிவில்லாத நினது அருளைப் பெறுதற்கு இன்னும் எனக்கு எத்தனை நாள் செல்ல வேண்டுமோ? அறியேன், எ. று.

     தூறு - பயனில்லாத முட் புதர்; இத் தூறுகள் தீங்கு புரியும் உயிர்கள் தங்குதற் கிடமாய்ச் சோலைகளின் பொலிவுக்கு இழுக்கை யுண்டு பண்ணுவதால், “தூறிலா வளச் சோலை” என்று புகழ்கின்றார். சுத்த சின்மயம் - தூயஞானமயம். உயிர்த்தொகை யனைத்தும் சின்மய மாயினும் மலவிருட் கலப்புடையவாய்த் தூய்மை யில்லாதன வாதல்பற்றித் தூய ஞானமேயுருவாகிய முருகப்பெருமானைச் “சுத்த சின்மயத் தேவே” என்று கூறுகின்றார். சித் - அறிவு; சித்மயம், சின்மயமாயிற்று; சித் முத்திரை, சின்முத்திரையாயது போல. “அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம்” (திருவருள் 529) என வள்ளற் பெருமானே வழங்குவது காண்க. திருவருட் செந்நெறிக்கு உரிய அறிவும் செயலும் உடையவரை, “மாறிலாதவர்” என்றும், அவர்தம் உள்ளத்தில் ஞானச் சுடரொளியாய் விளங்குவது பற்றி, “மனத் தொளிர் சோதியே” என்றும் மகிழ்ந்துரைக்கின்றார்; மணிவாசகர், “ஒப்புனக்கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே” (பிடித்த) எனக் கூறுவது காண்க. மயிலேறி வருவதை மாண்பாகக் கொண்டவனாதலால், “மயில் மிசை வரும் வாழ்வே” என்கின்றார். “ஊறிலாப் பெருநிலை” யென்பது, மாணிக்கவாசகர் எடுத்தோதும் “ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த” (கோயில்) இன்ப நிலை; அங்கு யாவையும் இன்பமே யாதலால், “பெரு நிலைய ஆனந்தமே” என்று கூறுகின்றார். சிவனை, இங்கே “ஒப்பிலான்” என்றது போலத் திருநாவுக்கரசர், “ஒப்புடைய னல்லன் ஒருவனல்லன், ஓரூரனல்லன் ஓர் உவம னில்லி” (வினாவிடை) என்று புகல்வது காண்க. பேறு - ஈண்டுச் செல்வம் குறித்து நின்றது. முருகன் ஈறில்லாதவனென்பதை அருணகிரியார், “பெம்மான் முருகன் பிறவான் இறவான்” (சந்தானு) என விளங்க வுரைப்பர். அருள் - பெரிதாகிய திருவருள் ஞானம்; ஞானத்தாலன்றி வீடு பேறெய்தா தெனச் சைவநூல்கள் கூறுவதால், அந்த ஞானத்தைப்பெற எனக்கு எத்தனை நாள் செல்ல வேண்டும் என வேண்டுகின்றவர், “நின் அருள் பெற எனக்கு இன்னும் எத்தனை நாட் செல்லும்” எனக் கேட்கின்றார்.

     இதனால், திருவருள் ஞானத்தை எப்போது பெறுவதென வேண்டுகின்றவாறாம்.

     (2)