422. கூழை மாமுகி லனையவர் முலைத்தலைக்
குளித்துழன் றலைகின்ற
ஏழை நெஞ்சினே னெத்தனை நாள்செலும்
இடர்க்கடல் விடுத்தேற
மாழை மேனியன் வழுத்துமா ணிக்கமே
வாழ்த்துவா ரவர்பொல்லா
ஊழை நீக்கிநல் லருள்தருந் தெய்வமே
உத்தமச் சுகவாழ்வே.
உரை: பொன் போலும் திருமேனியை யுடைய சிவபெருமான் வாழ்த்திப் போற்றுகின்ற மாணிக்க மணி போல்பவனே, வணங்கி வாழ்த்துகின்றவர்களைச் சூழ்ந்து நின்று வருத்துகின்ற பொல்லாத ஊழ்வினையைத் தொடர்பறுத்து நல்ல திருவருளைத் தருகின்ற தெய்வமே, உயர்ந்த சுக வாழ்வைத் தருபவனே, கரிய மேகம் போன்ற கூந்தலையுடைய மகளிர் கொங்கைகளிடையே வீழ்ந்து வருந்துகின்ற ஏழை மனத்தை யுடைய எனக்கு இத்துன்பக் கடலை விடுத்துக் கரையேறுதற்கு இன்னும் எத்தனைக் காலம் கழிய வேண்டுமோ? அறியேன், எ. று.
மாழை - பொன். “பொன்னார் மேனியன்” (மழபாடி) எனப்படுதலாற் சிவனை, “மாழை மேனியன்” என்கின்றார். வழுத்துதல் - வாழ்த்திப் போற்றுவது. மாணிக்க மணி போலும் நிறமுடைமை பற்றி, “மாணிக்கமே” எனப் பரவுகின்றார். வாழ்த்துவாரவர்- வாழ்த்துபவர். சாத்தனவன் வந்தான் என்றார் போலச் சுட்டுப் பெயர் இயற்பெயர் வழி வந்த தென்க. தன் பயனை எவ்வகையாலேனும் ஊட்டாது கழியாத பொல்லாங்குடைமை பற்றிப் “பொல்லா ஊழ்” என வுரைக்கின்றார். ஊழ் - பயன் முற்றிநிற்கும் பழவினை; “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்” (குறள்) என்று பெரியோர் கூறுவது காண்க. பழவினையை வெறிதே வினை யென்பதும், ஊழ் என்பதும், ஊழ்வினை யென்பதும் நூலோர் வழக்கு. வினை தனக்குரிய பயனைத் தன்னைச் செய்தாரை நுகர்விப்பது இறைவன் ஆணை; தன்னைச் செய்தாரையடைந்து பயன் நுகர்விக்கும் அறிவு வினக்கு இல்லை; ஆதலால் வினைப்பயனை யூட்டுவதும் ஊட்டாது கழிவிப்பதும் இறைவன தாணையாகலின், “ஊழை நீக்கி நல்லருள் தெய்வமே” என்று போற்றுகின்றார். அஞ்ஞானம் ஏதுவாக வரும் துன்பக் கலப்புச் சிறிதுமில்லாத பேரின்ப வாழ்வளிப்பவனாதல் தோன்ற, “உத்தமச் சுகவாழ்வே” என்று உரைக்கின்றார். கூழை -கூந்தல். கூழை மாமுகில் அனையவர் என்பது, மாமுகில் அனைய கூழையர் என மாறி இயைந்து, கரிய மேகம் போன்ற கூந்தலையுடைய மகளிர் எனப் பொருள் தருகிறது. மாமுகில் - கரிய மேகம். வருத்த மிகுதி புலப்பட, “உழன்றலைகின்ற நெஞ்சினேன்” எனவும், எதிர்த் தாற்றும் வன்மை யில்லாமை பற்றி, “ஏழை நெஞ்சினேன்” எனவும் இயம்புகின்றார்.
இதனால், எதிர் மறுத்து விலக்கும் திண்மை யின்றி மகளிர் கூட்டம் பயக்கின்ற துன்பக் கடலினின்றும் கரை யேறுதற்கு இன்னும் எத்தனை நாட்கள் செல்லும் என வேண்டிக் கொண்டவாறாம். (3)
|