423. ஐய வின்னுநான் எத்தனை நாட்செலும்
அல்லல்விட் டருள்மேவத்
துய்ய நன்னெறி மன்னிய வடியர்தம்
துயர்தவிர்த் தருள்வோனே
வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே
வேல்கொளும் கரத்தோனே
செய்ய மேனியெஞ் சிவபிரான் பெற்றநற்
செல்வனே திறலோனே.
உரை: கொடிய நெஞ்சை யுடையவர்கள் நெருங்க முடியாத மெய்ம்மை யுருவாகியவனே, வேற்படையை ஏந்தும் கையை யுடையவனே, சிவந்த திருமேனியை யுடைய எங்கள் சிவபெருமான் பெற்றருளிய நல்ல செல்வப் புதல்வனே, வலிமிக்க முருகப் பெருமானே, ஐயனே, தூயதாகிய நன்னெறிக் கண்ணே நிலைத்திருக்கும் அடியார்க்குளதாகும் துன்பங்களைத் துடைத்தருள்பவ னாதலால், இத் துன்பச்சூழலினின்றும் நீங்கி நான் நின் திருவருள் வாழ்வு பெறுதற்கு இன்னும் எத்தனை நாள் செலவிட வேண்டுமோ? அறியேன், எ. று.
வெய்ய நெஞ்சினர் - வெய்தாகிய குணமும் செயலும் பொருந்திய மனமுடையவர்; அஃதாவது கொடுமை மிக்க நினைவும் சொல்லும் செயலும் உடையவர். தண்ணிய நேரிய மெய்ம்மை சான்றவர்க் கல்லது நெருங்க வொண்ணாத நீர்மையுடையவன் இறைவன் என்றற்கு, “வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யன்” என விளங்க வுரைக்கின்றார். “சிவனெனும் நாமம் தனக்கே யுடைய செம்மேனி யம்மான்” (பொது) என்று சான்றோர் உரைப்பதால், “செய்ய மேனி யெம் சிவபிரான்” எனச் செப்புகின்றார். செல்வன், ஈண்டுப் புதல்வன் மேற்று. இம்மை, மறுமை, வீடுபேறு என்ற மூன்றையும் நோக்குவன நன்னெறியாகலின், ஈண்டு வீடுபேறு நோக்கிய நன்னெறிகளை மேற்கொண்ட அடியவர் என்றற்குத் “துய்ய நன்னெறி மன்னிய அடியர்” எனச் சிறப்பிக்கின்றார். அடியர் - இறைவன் திருவடியை மனத்தில் நினைந்தொழுகுபவர். அடியவர்களின் நினைவு செயல்கள் இடையூறுற்றுக் கெடாதவாறு காப்பவ னென்றற்கு, “அடியர்தம் துயர் தவிர்த்தருள்வோன்” எனவும், அவர்களைப் போல யானும் துன்பம் நீங்கி அருள் வாழ்வு பெற வேண்டுகின்றேன்; எனக்கு இன்னும் எத்தனைக் காலம் கழிய வேண்டுமென்று அறியேன் என்பாராய், “இன்னும் எத்தனை நாள் செலும் அல்லல் விட்டு அருள் மேவ” எனவும், கூறுகின்றார். அல்லல் - துன்பம்.
இதனால், நன்னெறி யடியவர் போல யானும் அல்லல் நீங்கி அருள் பெற வேண்டுகிறேன் என முறையிட்டவாறாம். (4)
|