424.

    பாவி யேனின்னும் எத்தனை நாள்செலும்
        பருவரல் விடுத்துய்யக்
    கூவி யேயன்பர்க் கருள்தரும் வள்ளலே
        குணப்பெருங் குன்றேயென்
    ஆவி யேயெனை யாள்குரு வடிவமே
        ஆனந்தப் பெருவாழ்வே
    வாவி யேர்தருந் தணிகைமா மலைமிசை
        மன்னிய வருள்தேனே.

உரை:

     நீர்நிலைகளால் அழகு மிகும் தணிகைப் பெருமலை மேல் எழுந்தருளும் திருவருளாகிய ஞானத் தேனே, மெய்யன்பு உடையவர்களைக் கூவி யழைத்துத் திருவருளைப் புரியும் வள்ளலே, பெருங் குணக்குன்றமாகிய முருகப் பெருமானே, எனக்கு உயிராயவனே, என்னை ஆண்டருளும் குருவே, ஆனந்தமாகிய பெருவாழ்வை நல்குபவனே, இப்பிறவித் துன்பமாகிய கடலினின்றும் நீங்கி உய்தி பெறுதற்குப் பாவியாகிய யான் இன்னும் எத்தனை நாட்கள் பொறுத்தல் வேண்டுமோ, அறியேன், எ. று.

     துன்பம் உறுதல் பற்றிப் “பாவியேன்” என்று பரிகின்றார். பருவரல் - துன்பம். அன்பு மிக்குடையோர் ஒருபால் ஒதுங்கி யொடுங்கி யிருப்பது பற்றி, அவர்களைக் கூவி யழைத்துப் பணி கொண்டு அருள் செய்வது தலைவர் கடனாதலால், “கூவியே யன்பர்க் கருள் தரும் வள்ளலே” என்று கூறுகின்றார். “கொள்ளுங் கில்லெனை யன்பரிற் கூய்ப்பணி, கள்ளும் வண்டு மறாமலர்க் கொன்றையான்” (சதகம்) என மணிவாசகர் உரைப்பது காண்க. அன்பர்களும் பணி செய்தல்லது நலம் பெற விழையார்; “கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணி யான் செய்யேனேல், அண்டம் பெறினும் அது வேண்டேன்” (அற்புத) என்று காரைக்காலம்மையார் கூறுவது காண்க. அறியாமை நீக்கி அறிவருளுதல் பற்றி, “ஆள் குரு வடிவமே” எனவும், அவ்வறிவால் ஞானப் பேரின்பமே எய்துவது கொண்டு, “ஆனந்தப் பெருவாழ்வே” எனவும் இயம்புகின்றார். வாழ்வு தருவதை, “வாழ்வே” என்கின்றார்.

     இதனால், பாவ வினையால் பருவரல் உற்றுக் கிடக்கும் யான் உய்தி பெற அருளுக என முறையிட்டவாறாம்.

     (5)