425. எளிய னேனின்னும் எத்தனை நாள்செலும்
இடர்க்கடல் விடுத்தேற
ஒளிய னேகமாய்த் திரண்டிடும் சிற்பர
உருவமே யுருவில்லா
வெளிய தாகிய வத்துவே முத்தியின்
மெய்ப்பயன் தருவித்தே
அளிய தாகிய நெஞ்சினர்க் கருள்தரும்
ஆறுமா முகத்தேவே.
உரை: அளிக்கத் தக்கதாகிய மனமுடைய பெருமக்களுக்கு அருள் வழங்கும் ஆறுமுகப் பெருமானே, மிகப் பல ஒளிகளெல்லாம் திரண்டு ஒன்றாய்த் தோன்றும் பரஞான வுருவாகியவனே, உருவ மில்லாத பரவெளியாய் உள்ள பொருளே, முத்தி ஞானத்தின் மெய்ம்மைப் பயனைத் தரும் காரணப் பொருளே, எளியவனாகிய யான் துன்பக் கடலினின்றும் கரை யேறுதற்கு இன்னும் எத்தனை நாள் செல்ல வேண்டுமோ, அறியேன், எ. று.
மெய்யன்பாற் குழைந்து திருவருட் பேற்றுக்குரிய பக்குவ மெய்திய பெரியவர்களை, “அளியதாகிய நெஞ்சினர்” என்று விளக்குகின்றார். பக்குவமுற்ற நெஞ்சோடு அருள் பெற வந்த புலவனை, “அளியன் தானே முதுவாய் இரவலன், வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்து” (முருகு) என முருகன் திருமுன்பிருக்கும் “குறும்பல் கூளியர்” உரைப்பதாக நக்கீரர் கூறுவது காண்க. “அளித்து வந்தடி கைதொழுமவர் மேல் வினை கெடும்” (ஆரூர்) எனத் திருநாவுக்கரசரும், “தொழு தெழுது உள்ளம் நெக்கிங்கு அளியிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே” (அச்சப்) என மாணிக்கவாசகரும் வழங்குவதால் அறியலாம். ஒளி யநேகம் திரண்டதனை “ஒருகோடி சூரியவொளி” என்று அருணகிரிநாதர் கூறுவர். வடநூலார், “பாஸ்கர கோடி துல்யம்” என்பர். சித்பரவுருவம் என்பது பரசித்துருவ மென இயைந்து பரஞான வுருவ மெனப் பொருளாகும். பரஞானத்தாற் பார்க்கப்படும் ஞான வுருவம், எனவும், அதனைப் பார்க்கும் பரஞானிகள் அப்பரத்தையே பார்த்திருப்பர். ஏனைப் பதார்த்தங்கள் பாரார் எனவும் சிவஞான சித்தியார் தெரிவிக்கின்றது; அது பற்றியே, “சிற்பரவுருவமே” எனக் குறிக்கின்றார். அப்பர ஞானத்தார் பார்க்கும் உருவப் பொருள் ஞானப் பரவொளியாய் விரிகின்ற போது உருவ நிலை கடந்து பரம்பொருளென ஓர் உணர்வாய் நிறைதல் தோன்ற, “உருவில்லா வெளியதாகிய வத்துவே” என மொழிகின்றார்; வத்து, வஸ்து என்னும் வடசொற்றிரிபு; பொருள் என்பது இதற்குப் பொருளாம். பரம்பொருள் என்ற கருத்தில் பரவஸ்து என வழங்குவது முண்டு. முத்தி, ஈண்டு முத்தி ஞானத்தின் மேற்று; முத்தி நெறி எனினும் அமையும். முத்தி நெறியின் கண் விளையும் பயன், முத்தி யின்பம். அம் முத்தி யின்பம் விளைதற்கும் முத்திக்குரிய முதல்வனே காரணமாவதால், அவனை முத்தி முதலென்னாது, “முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே” என விளக்குகின்றார். “முத்தி முழுமுதல் உத்தர கோச மங்கை வள்ளல்” (பூவல்லி) என்பது திருவாசகம். அளிக்கத் தக்க நெஞ்சில்லாமையால் எளியனாயினேன் என்பாராய் வாளா, “எளியேனே” என இசைக்கின்றார். அளிய நெஞ்சினனாதற்குப் பன்னாள் கழிய வேண்டும்; அதற்கிடையே பிறவித் துன்பங்கள் தாக்கி நெஞ்சினைக் கெடுக்கின்றமை தெரிவித்தற்கு, “இடர்க் கடல் விடுத்தேற இன்னும் எத்தனை நாள்செலும்” எனக் கேட்கின்றார்.
இதனால், அளியராகிய பெரியோர்க் களிக்கும் திருவருள் எளியனாகிய எனக்கு எய்த எத்தனை நாட்கள் செல்லுமோ என ஏங்கியவாறாம். (6)
|