426.

    தொண்ட னேனின்னு மெத்தனை நாள்செலும்
        துயர்க்கடல் விடுத்தேற
    அண்ட னேயண்டர்க் கருள்தரும் பரசிவ
        னருளிய பெருவாழ்வே
    கண்ட னேகர்வந் தனைசெய அசுரனைக்
        களைந்தருள் களைகண்ணே
    விண்ட னேர்புகுஞ் சிகரிசூழ் தணிகையில்
        விளங்கிய வேலோனே.

உரை:

     வானத்தின்கண் நேரே சென்று புகுகின்ற நெடு முடி சூழ்ந்த தணிகை மலையில் விளங்குகின்ற வேலவனாகிய முருகப் பெருமானே, அண்டங்களெல்லாம் உடையவனே, அண்டங்களில் வாழ்கின்ற தேவர்கட் கெல்லாம் அருள் செய்பவனாகிய பரமசிவன் பெற்றருளிய பெருவாழ்வே, திருமுன் வந்து கண்டு பலர் வழிபடவே சூரபன்மாவை முதலாகக் கொண்ட அசுரராகிய களைகளைக் களைந்து நல்வாழ்வு நிலவுவித்த களைகண் ஆனவனே, தொண்டனாகிய யான் துன்பக் கடலினின்றும் உய்ந்து கரை யேறுதற்கு இன்னும் எத்தனை நாள் வேண்டுமோ, அறியேன், எ. று.

     விண் - வானுலகம், வளைந்த முடிகளை யுடைய தாகாமல் நேரிய நெடு முடிகளையுடைய தாதல் தோன்ற “விண்தன் நேர் புகும் சிகரி” என்று விளம்புகிறார். சிகரி - மலையுச்சி. மலை மேலிட்ட அருள் விலக்குப் போலத் தணிகை மலைமேல் வேலேந்திய கையுடன் ஞானத் திருவொளி விளங்க எழுந்தருளுமாறு புலப்படத் “தணிகையில் விளங்கிய வேலோன்” என்று கூறுகிறார். அண்டம் - நிலவுலகு போலும் உலகுகள்; அவை ஆயிரத் தெட் டெனப் புராணங்கள் புகல்கின்றன. அண்டங்களையுடையன், அண்டன்; அண்டங்களில் வாழ்பவரை அண்டர் என்பர். அண்டங்களில் வாழும் உயிர்த்தொகை அனைத்துக்கும் வாழ்வருள்பவன் பரம்பொருளாகிய பரசிவன். தத்துவாதீதனாகிய சிவனைப் “பரசிவன்” என்கின்றார். பரசிவமே சிவனாய்ச் சகளிகரித்து முருகனைப் பயந்தருளினானாதலின், அந்தப் பரசிவ நிலையையே நினைவிற் கொண்டு, “பரசிவன் அருளிய பெருவாழ்வே” என முருகனைக் கூறுகின்றார். பெருவாழ்வு தருபவனாதலால் பெருவாழ்வு என அவனை உபசரிக்கின்றார். “அநேகர் கண்டு வந்தனை செய” என்பது தேவர்கள் அசுரரால் அலைப்புண்டமை கண்டு தேவரும் மக்களுமாகிய பலர் முருகனை வணங்கி வழிபட்டு ஆதரவு செய்ய வேண்டின வரலாற்றை நினைப்பிக்கின்றது. கண்டனேகர் என்றது எதுகை நோக்கி மாறி நின்றது. களைகண் - ஆதரவு. தொண்டனேன் - தொண்டு புரியும் யான். இறைவனுக்குத் “தொண்டலால் துணையுமில்லை” என்பர் சான்றோர்; எளியவர்களாகிய எங்கட்குத் தொண்டல்லது உயிர்த் துணையில்லை; அதனால், தொண்டு மேற்கொண்ட தொண்டனாகிய யான் துன்பக் கடலில் நெடிது கிடந்து வருந்த வேண்டிய நிலைமை யில்லை; ஆகவே, யான் துன்பக் கடலிலிருந்து கரை யேறற்கு இன்னும் எத்தனை நாட்கள் செல்லும் என வினவுவார், “துயர்க் கடல் விடுத்தேறத் தொண்டனேன் இன்னும் எத்தனை நாட்செலும்” என்று கேட்கின்றார்.

     இதனால், தொண்டு புரிந்தொழுகும் எனக்கு இத்துன்பக் கடலை விடுத்து நீங்க எத்தனை நாட்கள் செல்லும் என விண்ணப்பித்தவாறாம்.

     (7)