427. வீண னேனின்னு மெத்தனை நாட்செலும்
வெந்துயர்க் கடல்நீந்தக்
காண வானவர்க் கரும்பெருந் தலைவனே
கருணையங் கண்ணானே
தூண நேர்புயச் சுந்தர வடிவனே
துளக்கிலார்க் கருளீயும்
ஏண னேயெனை யேன்றுகொள் தேசிக
இறைவனே இயலோனே.
உரை: தேவர்களும் காண்பதற்கரிய பெரிய தலைவனே, அருளொழுகும் கண்களை யுடையவனே, தூண் போன்ற தோள்களை யுடைய அழகிய வடிவத்தையுடையவனே, அலையும் மனமில்லாதவர்க்கு அருள் வழங்கும் வன்மை யுடையவனே, என்னையும் ஏற்று ஆட்கொள்ளும் தேசிகனே, இறைவனே, நல்லியல் உடையவனே, வெம்மை மிக்க துன்பக் கடலிலிருந்து நீங்கிக் கரை யேறுதற்கு வீணனாகிய எனக்கு எத்தனை நாள் செல்லுமோ? அறியேன், எ. று.
தேவர் சேனாபதி யாதலால், அவர்களிற் பலரும் நெருங்கிக் காண்பதற் கரியனாய் இருந்தமையின், “காண வானவர்க்கு அரும்பெருந் தலைவனே” என்கின்றார். முறை வேண்டியும் குறை வேண்டியும் வருவார்க்குக் காட்சிக் கெளியனாகிய தலைவன், சேனாபதியாய்ப் பணி புரியுங்கால் எளியனாதல் போர் அறத்துக்கு மாறா மென அறிக. “தொழுதகை யுள்ளும் படை யொடுங்கும் ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து” (குறள்) என்பது காண்க. போரகத்தும் படை யழிந்தார்க்கும் வலி குன்றினார்க்கும் புறங் கொடுப்பவர்க்கும் பேரருள் புரிபவன் என்றற்குக் “கருணையங் கண்ணானே” என வுரைக்கின்றார். தூண், தூணம் என வந்தது. சுந்தரம் - அழகு. துளக்கு - மனம் திண்மை யின்றி அலைதல், அறிவொட்பமும் மனத்திட்பமும் உடையவர்களைத் “துளக்கிலா” ரென்கின்றார். ஏண் - வலிமை. தேசிகன் - ஆசிரியன். இயலோன் - நன்னடை யுடையவன். துன்பத்துக் கிரையாகி வருந்துவதன்றி வேறு நலம் காணாதவன் என்றற்குத் தம்மை, “வீணன்” என்று பழிக்கின்றார். வீணர் நெடுங்காலம் துன்பத்தி லாழ்ந்து கிடக்கற்பால ராதலை யுணர்ந்து வருந்துகின்றமை தோன்ற, “வீணனேன் வெந்துயர்க் கடல் நீந்த இன்னும் எத்தனை நாள் செலும்” என்று வினவுகின்றார்.
இதனால், பன்னாள் துயர்க் கடலில் வீழ்ந்து வருந்துதற்குரிய வீணனாகிய யான் இன்னும் எத்தனை நாள் அதனுட் கிடக்க வேண்டுமென முறையிட்டவாறாம். (8)
|