428.

    கடைய னேனின்னும் எத்தனை நாட்செலும்
        கடுந்துயர்க் கடல்நீந்த
    விடையி னேறிய சிவபிரான் பெற்றருள்
        வியன்திரு மகப்பேறே
    உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே
        உலகெலா மளிப்போனே
    அடைய நின்றவர்க் கருள்செயும் தணிகைவாழ்
        ஆனந்தத் தெளிதேனே.

உரை:

     எருதேறும் சிவபெருமான் பெற்றுதவிய பெரிய திருவருட் செல்வ மிக்க புதல்வனே, உலகிற் கெல்லாம் நாயகியாகிய உமாதேவிக்கு ஒப்பற்ற பெரிய செல்வமாக விளங்குபவனே, உலகனைத்தையும் காப்பவனே, திருவருளைப் பெறல் வேண்டித் திருமுன் போந்து வணங்கி நிற்பவர்க்கு அருள் வழங்கும் தணிகைப் பதியில் எழுந்தருளும் தெளிந்த இன்பத்தேனை யொப்பவனே, கடைப்பட்டவனாகிய எனக்குத் துயர மிக்க துன்பக் கடலிலிருந்து நீங்கி உய்தி பெறுதற்கு இன்னும் எத்தனை நாள் செல்ல வேண்டுமோ, அறியேன், எ. று.

     விடை - எருது. வியன் - பெருமை. கடுமை - மிகுதி. சிவபெருமான் நெற்றி விழியில் தீப் பொறியாய்த் தோன்றிச் சரவணப் பொய்கையில் குழந்தையாய் வளர்ந்தமையால், “மகப் பேறே” எனவும், உமாதேவி எடுத்து வளர்த்தமையால், “உடைய நாயகிக் கொரு பெருஞ் செல்வமே” எனவும் இயம்புகின்றார். உருவும் அருவுமாகிய பொருள் வகை அனைத்தையும் உடைய முதல்வியாதல் தோன்ற உமையம்மையை, “உடைய நாயகி” என உரைக்கின்றார். உலகுயிர்கள் பால் அன்புற்று அருள் புரிவது விளங்க, “உலகெலாம் அளிப்போன்” என்றும், பிறவித் துன்ப விருளைப் போக்கி ஞானப் பேரின்பம் பெற விரும்புவோர்க்கு அதனை நல்கி யின்புறுத்துவது கொண்டு, “அடைய நின்றவர்க்கு அருள் செயும் ஆனந்தத் தெளி தேனே” என்றும் கூறுகின்றார்.

     இதனால், அடைய நின்றவர்க்கு நீ அருளும் ஆனந்தத் தேனைக் கடையவனாகிய யான் பெறுதற்கு எத்தனை நாள் வேண்டுமோ என முறையிட்டவாறாம்.

     (9)