43. கண் மூன்றுறு செங்கரும்பின் முத்தே
பதம் கண்டிடுவான்
மண் மூன்றுலகும் வழுத்தும் பவள
மணிக் குன்றமே
திண் மூன்று நான்கு புயங்கொண் டொளிர்
வச்சிர மணியே
வண்மூன்றலர் மலைவாழ் மயில் ஏறிய
மாணிக்கமே.
உரை: கண்கள் மூன்றுடைய சிவபிரானாகிய செங்கரும்பீன்ற முத்துப் போன்ற முருகப் பெருமானே, பவள மணியாலாகிய குன்றம் போல்பவனே, திண்ணிய தோள்கள் பன்னிரண்டு கொண்டு விளங்கும் வயிரமணி போன்றவனே, வளவிய முப்போதும் மலர்கின்ற குவளை பூத்த சுனைகள் பொருந்திய தணிகை மலையில் உறையும் மயிலேறும் மாணிக்க மணியாகிய பெருமானே, மண் முதலாகிய மூன்று உலகத்தவரும் நின் திருவடியைக் காண்பது கருதி வழிபடுகின்றார்கள்; அது பற்றியே யானும் வழிபடுகின்றேன், எ. று.
கரும்பின் கணுவும் கண்ணெனப்படுதலின், முக்கண் மூர்த்தியாகிய சிவபெருமானைக் “கண் மூன்று உறு செங்கரும்பு” என்றும், சிவன் நெற்றி விழியாற் பெற்ற மகனாதலால் “செங்கரும்பின் முத்தே” என்றும் கூறுகிறார். கரும்பிடத்தே முத்துத் தோன்றும் என்பவாகலின் “கரும்பின் முத்தே” என எடுத்துரைக்கின்றார். மணிவகை ஒன்பதில் பவளம் ஒன்றாதலால், “பவளமணிக் குன்றமே” எனவும், வைரமும் ஒன்றாதல் பற்றி, “வச்சிர மணியே” எனவும், செம்மணியாகிய மாணிக்கமும் ஒன்றாதலால் “மாணிக்கமே” எனவும் இயம்புகிறார். இப்பாட்டின்கண் மணி வகைகளான முத்தும், பவளமும், வயிரமும், மாணிக்கமும் கூறப்படுவது காண்க. மண் விண் பாதல மென்ற மூன்றுலகும் “மண் மூன்றுலகு” எனக் குறிக்கப்படுகின்றன, உலகு ஆகு பெயரால் உலகுகளில் வாழும் உயர்ந்தோரைக் குறிக்கின்றது. மூன்று உலகங்களிலும் வாழும் உயர்ந்தோர் வழுத்துதலால் யானும் வழுத்துகின்றேன் என்பது குறிப்பெச்சம்.
இதனால் மூன்றுலகத்து உயர்ந்தோர்கள் முருகப் பெருமான் திருவடியைப் பெறுவது கருதி நாளும் வழிபடுகின்றார்கள் என்பதாம். (43)
|