40. ஏத்தாப் பிறவி யிழிவு

        அஃதாவது ஏத்தாதார் பிறப்பு இழிந்தது என்ற கருத்தை வற்புறுத்துவதாகும். இப்பிறப்பைக் கொண்டு அன்பும் அறமும் ஞானச் செய்தியும் பொருந்திய நற்செயல்களால் உயர்வதை விடுத்து இழி செயல்களைச் செய்து கீழ்மையுற்றேன்; இதற்கோ எனக்குப் பிறவி வாய்த்தது? பயன்படாத இப்பிறப்பை ஏன் எடுத்தேனோ என்ற ஏக்கம் இப்பத்தின்கண் மிக்கிருப்பது காணலாம். வள்ளற் பெருமான் இவ்வாறு நினைந்து வருந்துதற்கு வழி காட்டியது திருநாவுக்கரசருடைய குறைந்த திரு நேரிசைப் பதிகத்துள் ஒன்று என்பதில் ஐயமில்லை. அதன்கண் அவர், “இன்றுளேன் நாளையில்லேன் என்செய்வான் தோன்றினேனே”, “பாவம் தன்னை யீட்டினேன் களைய மாட்டேன் என்செய்வான் தோன்றினேனே” “நிவஞ்சகத் தகன்ற செம்மை ஈசனை யறிய மாட்டேன் என்செய்வான் தோன்றினேனே”, “ஆதியை ஓதி நாளும் எட்டனை யெட்ட மாட்டேன் என்செய்வான் தோன்றினேனே” என்று பல பாட்டுக்களில் உரைப்பது காணலாம். இவற்றை ஓதியும் உணர்ந்தும் பண்பட்டமையால் தான் வடலூர் வள்ளல் இப்பத்தின்கண், படிப்பவர் எளிதிற் பொருளுணர்ந்து தெளிவுறும் வகையில் உரைத்தருள்கின்றார்.

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

430.

    கல்லை யொத்தவென் னெஞ்சினை யுருக்கேன்
        கடவு ணின்னடி கண்டிட விழையேன்
    அல்லை யொத்தகோ தையர்க்குளங் குழைவேன்
        அன்பி லாரொடு மமர்ந்தவ முழல்வேன்
    தில்லை யப்பனென் றுலகெடுத் தேத்தும்
        சிவபி ரான்றரும் செல்வநின் றணிகை
    எல்லை யுற்றுனை யேத்திநின் றாடேன்
        என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.

உரை:

     எளியனாகிய யான், கல் போன்ற எனது நெஞ்சினை யுருகச் செய்யாமலும், முருகக் கடவுளாகிய நின்னுடைய திருவடியைக் காண விரும்பாமலும், இருள் போன்ற கூந்தலில் பூமாலை யணிந்த மகளிர் பொருட்டு மனம் கரைந்து வருந்துவதும், அன்பில்லாதவர்களோடு அன்புடன் கூடி வீணே திரிவதும் செய்தேன்; தில்லையப்பன் என்று உலகவர் புகழ்ந்தோதும் சிவபெருமான் பெற்ற செல்வப் புதல்வனாகிய நின்னுடைய திருத்தணிகைப் பதியின் எல்லையை யடைத்து நின்னைப் புகழ்ந்து பாடி யாடேனாயினேன்; இவ்வுலகில் இவற்றைச் செய்தலின்றி ஏன் பிறந்தேனோ தெரியவில்லையே! எ. று.

     அன்பால் நினைவு மிக்கவழி நெக்குருகுதலும் வன்பால் நினைவு மிக்க வழி வலிதாய் இறுகுதலும் நெஞ்சுக்கு இயல்பாதலால், வன்புற்று இறுகிக் கல்லையொத்த என் நெஞ்சினை அன்பு கொண்டு உருகச் செய்திலேன் என்பார், “கல்லை யொத்த என் நெஞ்சினை யுருக்கேன்” என்றும், கடவுளாகிய நின் திருவுருவைக் காணின் வலிதாகிய மனம் குழைவுறும்; அதனையும் செய்திலேன் என்பாராய்க் “கடவுள் நின் அடி கண்டிட விழையேன்” என்றும் கூறுகின்றார். கோதை - பூமாலை; ஈண்டுப் பூமாலை யணியும் மகளிர் கூந்தல் மேல் நிற்குமாறு, “அல்லை யொத்த கோதையர்” என்று சிறப்பிக்கின்றார். பின்புறத்தே காணப்படும் இருட் கூந்தலைக் கண்டே குழையும் என் நெஞ்சு மதி யொத்த முகம் காணின் நீராய்க் கரைந் தொழியும் என்பது கருத்து. அன்பு, அறச் சூழலில் அருளப் பயக்கும் அமைதி யுடையதாதலால், அஃது இல்லாதார் கூட்டம் தீது பயக்கு மென்பதறியாது அதனோடு கூடி வீணுற்றேன் என்பார். “அன்பிலா ரொடும் அவம் உழல்வேன்” எனச் சொல்லி வருந்துகின்றார். அப்பன்- தலைவன். செல்வன்- செல்வப் புதல்வன். நின்றேத்துமிடத்து அன்பு மிகுந்து பரவச மாகுங்கால் ஆடுதல் உடனிகழ்ச்சியாதல் பற்றி, “ஏத்தி நின்று ஆடேன்” என்றும், இவற்றைச் செய்யாமையால் என் பிறவி பயனிலதாயிற் றென்றற்கு, “என்செய்வான் பிறந்தேன்” என்றும் கூறுகின்றார். “என்செய்வான் தோன்றினேனே” (பொது.நேரிசை) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.       இதனால், நெஞ்சுருகுவதோ, திருவடி காண்பதோ, ஏத்தி நின்றாடுவதோ செய்யாத யான் ஏன் பிறந்தேனென இரங்கியவாறாம்.

     (1)