432. புலைய மாதர்தம் போகத்தை விழைந்தேன்
புன்மை யாவைக்கும் புகலிட மானேன்
நிலைய மாந்திருத் தணிகையை யடையேன்
நிருத்த னீன்றருள் நின்மலக் கொழுந்தே
விலையி லாதநின் றிருவருள் விழையேன்
வீணர் தங்களை விரும்பிநின் றலைந்தேன்
இலையெ னாதணு வளவுமொன் றீயேன்
என்செய் வான்பிறந் தேனெளி யேனே.
உரை: கூத்தப் பெருமான் பெற்றளித்த நின்மலமான புதல்வனே, எளியனாகிய யான் புலைத் தன்மையை யுடைய மகளிர் இன்பத்தை விரும்பியும், புன்மை பொருந்திய நினைவு செயல்கட்கு உறைவிடமாகியும், அருணிலையமாகிய திருத் தணிகைக்குச் செல்லாமலும், விலை மதிக்க வொண்ணாத நினது திருவருளைப் பெற ஆர்வங் கொள்ளாமலும், வீணர் கூட்டத்தை விரும்பியும், ஒருவர்க்கேனும் இல்லை யென்று சொல்லாமல் ஒன்றையும் அணுவளவும் ஈதலின்றியும் இருந்தொழிந்தேன்; இத்தகைய யான் ஏன் பிறந்தேனோ? அறியேன், எ. று.
நிருத்தன் - கூத்தாடுபவன். இளையனாயினும் மலப்பிணிப்பில்லாதவன் என்றற்கு, “நின்மலக் கொழுந்து” என்று சிறப்பிக்கின்றார். புலைய மாதர் - புலைத் தன்மையை யுடைய மகளிர். போக மென்பது இன்பமும் துன்பமுமாகிய இருவகை நுகர்ச்சியையும் குறிக்குமாயினும் ஈண்டுக் காம வின்ப நுகர்ச்சி மேற்று. புன்மை - கீழ்மைப் பண்பு. நிலையம் - அருள் நிலையம். திருவருள் - திருவருட் பேற்றுக் கமைந்த உண்மை ஞானம்; சைவ நூல்கள் இதனைத் திருவருள் ஞான மென்றே வழங்குவதுண்டு. வீணர்களுடன் உறவு கொள்ளின் பயனில்லாத ஆசைகள் தோன்றி அலைப்பதால், “வீணர் தங்களை விரும்பி நின்றலைந்தேன்” என வுரைக்கின்றார். இல்லை யென்றுரைப்பது குலத்தால் உயர்ந்தோர் பாற் காணப்படாத குற்றமென்பர் திருவள்ளுவர்; யான் அச்சொல்லைச் சொல்லாமல் ஒன்றையும் ஒருவர்க்கும் மறந்தும் அணுவளவும் ஈந்ததில்லை என்கின்றார்.
இதனால், புன்மைத் தன்மையும் வீணர் கூட்டுறவும் திருத் தணிகைக்குச் செல்லாமையும் பிறவுமாகிய குற்றங்களை யுடையனாய் நான் ஏன் பிறந்தே னென்று முறையிட்டவாறாம். (3)
|