433.

    மருட்டு மங்கையர் புழுக்குழி யாழ்ந்து
        வருந்தி நாடொறு மனமிளைக் கின்றேன்
    தெருட்டு நின்திருத் தணிகையை யடையேன்
        சிவபி ரான்பெற்ற செல்வமே நினது
    அருட்டி றத்தினை நினைந்துநெக் குருகி
        அழுது கண்கணீர் ஆர்ந்திட நில்லேன்
    இருட்டு வாழ்க்கையில் இடறிவீழ் கின்றேன்
        என்செய் வான்பிறந் தேனெளி யேனே.

உரை:

     சிவபெருமான் பெற்ற செல்வ மகனே, ஆடவரை மயக்குகின்ற மகளிரின் புழு நிறைந்த குழியாகிய பெண்ணுறுப்பில் வீழ்ந்து வருத்தமுற்று மனம் சோர்வெய்தும் எளியேனாகிய யான், அறிவைத் தெளிவிக்கும் நினது திருத்தணிகைப் பதியை யடையாமலும், நின்னுடைய திருவருள் நலத்தை யெண்ணிக் குழைந்து நெஞ்சுருகி அழுகை மேலிட்டுக் கண்களில் நீர் பெருகி வழிய நிற்பதின்றியும், இருள் நிறைந்த வாழ்விற் கிடந்து தவறு செய்து வீழ்ந்து மெலிகின்றேனாதலால், நான் ஏன்தான் பிறந்தேனோ? அறியேன், எ. று.

     மக்கட் பேற்றைச் செல்வ மென்னும் வழக்குப் பற்றி முருகப் பெருமானைச் சிவபிரான் பெற்ற செல்வமே என்று கூறுகின்றார். ஆடவரை மருட்டினாலன்றி இன்ப நுகர்ச்சிக் குதவாராதலால், போக மகளிரை, “மருட்டும் மங்கையர்” எனவும், நுகர்ச்சி யிறுதிக்கண் சோர்வும் இளைப்பும் எய்துமாறு புலப்பட, “வருந்தி நாடொறும் மனம் இளைக்கின்றேன்” எனவும் இயம்புகின்றார். முருகனை வணங்கிப் பரவும் வழிபாடு அறிவுக்குத் தெளிவு நல்குவது கண்டு, “தெருட்டும் நின் திருத்தணிகை” என்று சிறப்பிக்கின்றார். அறியாதன அறிவித்தலும் கேளாதன கேட்பித்தலும், காணாதன காண்பித்தலும் பிறவும் அருள்வகை யாதலால், “அருள் திறத்தினை” என்றும், அதனை நினைக்கும் போது அன்பால் நெஞ்சம் குழைந்துருகக் கண்கள் நீர் மிக்குச் சொரிதல் இயல்பாதலால், “நினைந்து நெக்குருகி அழுது கண்கணீர் ஆர்ந்திட நில்லேன்” என்றும் எடுத்தோதுகின்றார். “அறிவிலாத எனைப் புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை யருளி மேல் நெறி யெலாம் புலமாக்கிய எந்தை” எனவும், “காட்டாதன வெல்லாம் காட்டிப் பின்னும் கேளாதன வெல்லாம் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்” எனவும் (சதகம்) மாணிக்கவாசகர் கூறுவதும், “தன்னையும் தன்திறத் தறியாப் பொறியிலேனைத் தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனைத் தொடர்ந் தென்னை யாளாக் கொண்ட தென்னெறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை” (எறும்பி) எனத் திருநாவுக்கரசர் கூறுவதும் நினைவு கூரத் தகுவனவாம். இருள் படிந்த உள்ளத்துடன் நடத்துவது மண்ணியல் வாழ்வாதலால், இடருற்று வீழ்தலும் வருந்துதலும் இயல்பாதல் விளங்க, “இருட்டு வாழ்க்கையில் இடறி வீழ்கின்றேன்” எனப் புலம்புகின்றார். மாணிக்கவாசகர், “இருள்திணிந் தெழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் இது, இத்தைப் பொருளெனக் களித்து அருநரகத்திடை விழப் புகுகின்றேன்” (அதிசயம்) என்பது காண்க.

     இதனால் அருட் டிறம் அறிந்து உருகாமல் இருட்டு வாழ்கையிற் கிடந்து இடருற்றுக் கெடுகின்றே னாதலால் ஏன் பிறந்தேனோ என முறையிட்டவாறாம்.

     (4)