434.

    நச்சி லேபழ கியகருங் கண்ணார்
        நலத்தை வேட்டுநற் புலத்தினை யிழந்தேன்
    பிச்சி லேமிக மயங்கிய மனத்தேன்
        பேதை யேன்கொடும் பேயனேன் பொய்யேன்
    சச்சி லேசிவ னளித்திடு மணியே
        தங்க மேயுன்றன் தணிகையை விழையேன்
    எச்சி லேவிழைந் திடருறு கின்றேன்
        என்செய் வான்பிறந் தேனெளி யேனே.

உரை:

     சிவபிரான் கண்ணிலே பெற்ற மணியே, தங்கமே காம விருப்பத்திலே பழகிய கருங் கண்களை யுடைய மகளிர் இன்பத்தையே விரும்பி நல்லறிவை இழந்து, பொருட் பித்துற்று மிகவும் மயங்கிய மன முடையனாகிப் பேதையும் கொடிய பேயனும் பொய்யனுமாய், உனது தணிகை மலையை விரும்பாமல், நுகர்ந்ததையே நுகர்ந்து துன்புறுகின்ற எளியனாகிய யான் ஏன் பிறந்தேனோ, அறியேன், எ. று.

     நச்சு - விருப்பம். மை தீட்டும் கரிய கண்ணுடைய ரென்றற்கு மகளிரைக் “கருங் கண்ணார்” என்பர். பெண் மக்களை யாவரும் அன்பொடு பேணுவது பற்றி, “நச்சிலே பழகிய கருங்கண்ணார்” எனச் சிறப்பிக்கின்றார். நலம் - ஈண்டு மகளிர் பாற் பெறலாகும் காம வின்பம் குறித்து நிற்கிறது. கருங்கண்ணார் என்பது பொதுவாக மகளிர்க் காயினும் இங்கே விலைமகளிர்க் காயிற்றென்க. புலம் - அறிவு. பெண்மை நலத்தையே பெரிதும் விரும்புவோர், ஆண்மை நலத்தையும் அறிவையும் இழப்பர் என்பது பற்றி, “நற் புலத்தினை யிழந்தேன்” என வுரைக்கின்றார். பித்து- பற்றுக் காரணமாக உண்டாகும் மயக்கம்; இங்கே பித்து, பிச்சு என மருவிற்று. “பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி” (அண்டப்) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. சச்சு - கண்; வடசொற் சிதைவு. நெற்றிக் கண்ணில் வெளிப்பட்டமையால், “சச்சிலே சிவன் அளித்திடும் மணியே” என்று கூறுகிறார். தங்கம் போலும் மேனியனாதலால் “தங்கமே” என்கிறார். உண்டதே யுண்டு நுகர்ந்ததே நுகர்ந்து வாழ்வது தோன்ற, “எச்சிலே விழைந்து இடருறு கின்றேன்” என இயம்புகின்றார்.

     இதனால், நற்புல மிழந்து மயங்கும் மனத்தனாய் எச்சிலே விழைந்து இடருறுவதால் நான் ஏன் பிறந்தேன் என நினைந்து வருந்தியவாறாம்.

     (5)