435. மின்னை யன்னநுண் ணிடையிள மடவார்
வெய்ய நீர்க்குழி விழுந்திளைத் துழன்றேன்
புன்னை யஞ்சடை முன்னவ னளித்த
பொன்னை யன்னநின் பூங்கழல் புகழேன்
அன்னை யென்னால லருள்தரும் தணிகை
அடைந்து நின்றுநெஞ் சகமகிழ்ந் தாடேன்
என்னை யென்னையிங் கென்செய லந்தோ
என்செய் வான்பிறந் தேனெளி யேனே.
உரை: மின்னலைப் போன்ற நுண்ணிய இடையை யுடைய இளமகளிரின் வெவ்விய சிறுநீர்க் குழியாகிய அல்குலில் வீழ்ந்து மனம் இளைத்து வருந்தினே னன்றிப் புன்னை மலர் போலும் சடையையுடைய முன்னவனாகிய சிவபெருமான் பெற்றளித்த பொன்னிறம் கொண்ட முருகப் பெருமானாகிய நினது பூப் போன்ற கழலணிந்த திருவடியைப் புகழ்வதோ, தாய் போல் நல்லருளைப் புரியும் தணிகைப் பதியை யடைந்து நின் திருமுன்பு, நின்று மனம் மகிழ்ந்து பரவசமாகி ஆடுவதோ செய்வ தில்லேன்; இவ்வுலகில் என்னுடைய செயல் தான் என்னென்னவோ, ஐயோ, யாது செய்தற் பொருட்டு எளியனாகிய யான் பிறந்துள்ளேனோ? அறியேன், எ. று.
இளமகளிர் இடைக்கு மின்னற் கொடியை உவமம் கூறுவது மரபாதலால், “மின்னையன்ன நுண்ணிடை இளமடவார்” என வுரைத்து, அவரது அல்குலை, “வெய்ய நீர்க்குழி” என இழித்துக் கூறுகின்றார். புன்னை மலர் பொன்னிறத்த தாதலால், பொன்னிறச் சடையையுடைய சிவனைப் “புன்னியஞ் சடை முன்னவன்” எனவும், முருகனும் பொன்னிறப் புங்கவனாதல் விளங்கப் “பொன்னை யன்ன நின் பூங்கழல்” எனவும் புகல்கின்றார். பூங்கழல் - பூப்போல் அழகிய கழல்; பூத்தொழில் பொறிக்கப்பட்ட கழல் என்றுமாம். “முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருள்” எனப்படுவது பற்றிச் சிவனை “முன்ன வன்” என மொழிகின்றார். தாய் போல் தலையளிக்கும் தலைவனது தலமாதல் பற்றி, “அன்னை யென்ன நல்லருள் தரும் தணிகை” என்றும், தணிகையில் முருகனது அருட் காட்சி உள்ளத்தில் அன்பைப் பெருக்கிப் பரவசமாக்குவது விளங்கத் “தணிகை யடைந்து நின்று நெஞ்சக மகழிந்து ஆடேன்” என்றும் இயம்புகிறார். முருகனது திருவருட் பேற்றுக் கென்றமைந்த சரியை முதலிய தவச்செயல்க ளொழிய வேறே இல்லாமை காணுதலால், அறிவு கலங்கி, “என்னை யென்னை என் செயல்” என்று கூறிப் பிறந்த பிறப்புக்குச் செயலொன்றும் இல்லாதாயின் பயனில் பிறப்பாய் ஒழிவதை யெண்ணி, “என்செய்வான் பிறந்தேன்” என்று வருந்துகின்றார். “விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும், முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன் இயல வெள்ளம், திளைக்கின்ற முடியினான்றன் திருவடி பரவ மாட்டா திளைக்கின்றே னிருமி யூன்றி என்செய்வான் தோன்றினேனே” (பொது. குறைந்த நேரிசை) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.
இதனால் திருவடி புகழாமையும் திருத்தணிகை சென்றடையாமையும் சொல்லி வருந்தியவாறாம். (6)
|