436. பட்டி மாடெனத் திரிதரு மடவார்
பாழ்ங்கு ழிக்குள்வீழ்ந் தாழ்ந்திளைக் கின்றேன்
தட்டி லார்புகழ் தணிகையை யடையேன்
சம்பு வென்னுமோர் தருவொளிர் கனியே
ஒட்டி லேனினை யுளத்திடை நினையேன்
உதவு றாதுநச் சுறுமர மானேன்
எட்டி யென்முன மினிப்புறு மந்தோ
என்செய் வான்பிறந் தேனெளி யேனே.
உரை: சம்பு எனச் சான்றோர் புகழும் சிவனென்னும் கற்பக மரத்தின் கண் தோன்றி ஒளி திகழும் கனியே, எதற்கும் உதவாத நச்சு மரம் போன்ற எளியவனாகிய யான், பட்டி மாடு போலத் திரிகின்ற இளமகளிரின் பாழ்த்த குழியாகிய அல்குலின் கண் வீழ்ந்து புதையுண்டு இளைத்துக் கெடுகின்றேனே யன்றிக் குறை சிறிதுமில்லாத பெரியோர்கள் புகழ்ந்து போற்றும் தணிகை மலையை யடைவதோ, உனது திருவருட்குரிய நெறி யிலொழுகுவதோ, உன்னை மனத்தின்கண் நினைப்பதோ இல்லாதவனாயினேன்; எட்டி மரம் தானும் என் முன் வைத்து நோக்கினால் இனிதாகும்; ஐயோ, யான் ஏன் பிறந்தேனோ, அறியேன், எ. று.
சிவபெருமானைச் சிறப்பிக்கும் பெயர் ஆயிரத்துள் சம்பு என்பது மொன்றாதலால், “சம்பு என்னும் ஓர் தரு” எனச் சிவனைக் குறிக்கின்றார். சம்பு என்பது நாவல் மரத்துக்கும் பெயர். நாவல் மரங்களைச் சிறப்பாக வுடைமை பற்றி நமது பாரத நாட்டை நாவலந் தீவு என்றும், சம்புத் தீவு என்றும் புராணிகர் உரைப்பர். தரு, ஈண்டுக் கற்பகத் தரு; வேண்டுவார் வேண்டிற் றீயும் செயல் கற்பகத் தருவுக்கு உண்டாதலால், அப்பெற்றியனாகிய சிவபிரானையும் “சம்பு வென்னும் ஓர் தரு” என்று உருவகம் செய்கின்றார். கற்பகக் கனி போல் நிறமும் ஒளியும் நலமும் உடையனென்ப துணர்த்தற்கு முருகனைத் “தருவொளிர் கனியே” எனப் புகழ்கின்றார். நச்சுறு மரம் - நஞ்சின் தன்மையை யுடைய மரம்; அஃது எதற்கும் உதவாமை பற்றி, “உதவுறாது நச்சுறு மரமானேன்” என்று வள்ளலார் தம்மைப் பழித்துரைக்கின்றார். பட்டி மாடு - பட்டியிலே அடைத்து வைக்கப்படும் மாடு. பட்டி - நாற்புறமும் வன்மையான வேலியிட்டோ, சுவர் வைத்தோ அமைக்கப்படும் காவலகம்; மக்களை வைக்கும் காவலகத்தைச் சிறையென்பது போல மாடுகளை அடைத்து வைக்கும் காவலகத்தைப் பட்டி யெனத் தொண்டை நாட்டவர் வழங்குவர். பட்டியிலடைத்துக் காப்பது போல மக்களைச் சிறைப்படுத்திக் காவல் புரிவது பாடிகாவல் எனப்படும்; இதனால் தான், “பல் குன்றக் கோட்டத்துப் பாடிகாவல் வெண்குன்றக் கோட்டத்துப் பட்டி காவலானாற் போல்” என்றொரு பழமொழியும் உளதாயிற்று. பெதும்பைப் பருவத்தில் இளமகளிரைப் புறம் போக விடாது மனை யகத்தே வைத்துப் பேணுவது மரபு. இதனைச் சிறை காத்தல் என்றலும் உண்டு. மனைச் சிறையில் வளர்த்தற்குரிய இள மகளிருள் நிறையில்லாத பெண்களை இங்கே, “பட்டி மாடெனத் திரிதரும் மடவார்” என இகழ்கின்றார். தட்டு - குறைபாடு. செயல் வகைகள் உலகியல் இன்பத் துறையில் இயங்கினமையால், நினது அருட் பேற்றுக்குரிய நெறியை மேற் கொள்ளேனாயினேன் என்பார், “நினை ஒட்டிலேன்” எனவும், அதற்குக் காரணம் நின்னை என் நெஞ்சிற் கொள்ளாமையே யென்றற்கு, “நினை யுளத்திடை நினையேன்” எனவும் இயம்புகின்றார். தொண்டிற்கு ஆகாமையும், ஆதரவுக்குக் கூடாமையும் புலப்பட, “உதவுறாது நச்சுறு மரமானேன்” என்றும், “எட்டியென் முனம் இனிப்புறும்” என்றும் இசைக்கின்றார்.
இதனால், நச்சு மரமும் எட்டி மரமும் போல்பவனாகிய யான் ஏன் பிறந்தேனோ என ஏங்கியவாறாம். (7)
|