437.

    ஓங்கி நீண்டவாள் உறழ்கருங் கண்ணார்
        உவர்ப்புக் கேணியி லுழைத்தக மிளைத்தேன்
    வீங்கி நீண்டதோ ரொதியென நின்றேன்
        விழலுக் கேயிறைத் தலைந்தனன் வீணே
    தாங்கி னேனுடற் சுமைதனைச் சிவனார்
        தனய நின்திருத் தணிகையை யடையேன்
    ஏங்கி னேன்சுழற் படுதுரும் பெனவே
        என்செய் வான்பிறந் தேனெளி யேனே.

உரை:

     சிவபெருமான் திருமகனே, நினது திருத் தணிகைப் பதிக்கு வந்தடையாமல், உயர்ந்து நீண்ட வாள் போலும் கரிய கண்களையுடைய மகளிரின் உவர் நீர்க்கிணறு போன்ற அல்குலில் வீழ்தற் பொருட்டு மிகவும் உழைத்து மேனியிளைத்தேனாயினும், பருத்து நீள வளர்ந்த தொரு ஒதி மரம் போல நின்றும், வீணாக விழலுக்கு நீர் இறைப்பார் போலப் பயனொன்று மின்றி யலைந்தும், உடலாகிய சுமையைத் தாங்கியும், சுழற் காற்றிற் பட்ட துரும்பு போலச் சுழன்று ஏங்கியும் எளியனாகிய யான் ஏன் பிறந்தேனோ, அறியேன், எ. று.

     தனயன் - புதல்வன். ஓங்குதல் - உயர்தல். உறழ்தல் - ஒப்பாதல். மை தீட்டப்படுவது தோன்றக் “கருங்கண்ணார்” என்கின்றார். உவர்ப்புக் கேணி - உவர்நீர்க் கிணறு. எத்துணை நீர் பருகினும் தாகம் நீக்காத உவர் நீர் போல எத்தனை நாள் கூடினும் ஆசை நீக்காத போக வுறுப்பெனற்கு, “உவர்ப்புக் கேணி” என உரைக்கின்றார். அகம் இளைத்தேன், மனம் சோர்ந்தேன் எனினும் அமையும். வீங்குதல் - பருத்தல். “ஒதி பருத்தாலும் உத்தரத்துக் காகாது” என்ற பழமொழியை நினைவிற் கொண்டு, “வீங்கி நீண்டதோர் ஒதி யென நின்றேன்” என்கின்றார். மிகப் பெரிதுழைத்துப் பயனில்லாத வேலையை விழலுக்கு நீர் இறைத்தது போலும் என்பது உலக வழக்கு. விழல் - ஏரிகளில் புதர் புதராக வளரும் புல்வகை. இவற்றை அறுத்துக் கொணர்ந்து வீடுகட்குக் கூரை வேய்வது தொண்டை நாட்டு வழக்காறு. இக் கருத்தையே மணிவாசகப் பெருமான், “ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம், பாழுக் கிறைத்தேன்” (தோணோக்) என உரைக்கின்றார். உறுதிப் பொருட் பேற்றுக்கு உதவாத வுடம்பு வெறுஞ் சுமையாதலை நினைந்து வருந்துகின்றா ராதலால், “தாங்கினேன் உடற் சுமைதனை” என மொழிகின்றார். திருவருட் பேறல்லது பேறு பிறிதில்லை என்னும் திண்ணிய நினைவும் செயலும் எய்தாது, பல தலையாய நினைவு செயல்களால் அலைக்கப்பட்டமை விளங்க, “ஏங்கினேன் சுழற் படு துரும் பெனவே” என்று சொல்லுகின்றார். சுழல் - சுழற் காற்று. இவை பிறவிப் பயனாகாமை தெளிவாதலால், “என் செய்வான் பிறந்தேன்” எனப் புலம்புகின்றார்.

     இதனால் ஒதி யெனப் பருத்து நீண்டும், வீணே விழலுக் கிறைத்தும், துரும்பு போற் சுழன்றும் நற்பயன் பெறாமை நினைந்து பிறவியை நொந்து கொண்டவாறாம்.

     (8)