438.

    பண்ண ளாவிய மொழியினால் மயக்கும்
        படிற்று மங்கையர் பால்விழை வுற்றேன்
    தண்ண ளாவிய சோலைசூழ் தணிகைத்
        தடத்த ளாவிய தருமநற் றேவே
    பெண்ண ளாவிய புடையுடைப் பெருமான்
        பெற்ற செல்வமே யற்றவர்க் கமுதே
    எண்ண ளாவிய வஞ்சக நெஞ்சோ
        டென்செய் வான்பிறந் தேனெளி யேனே.

உரை:

     குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த தணிகை மலையில் பெரிய இடத்தில் கோயில் கொண்ட தரும மூர்த்தியாகிய நல்ல தெய்வமே, பெண்ணாகிய உமையம்மையை ஒரு பால் உடைய பெருமானாகிய சிவன் பெற்ற செல்வப் புதல்வனே, பற்றற்றவர்க்கு அமுதம் போல்பவனே, பண்ணிசை யமைந்த சொற்களால் ஆடவரை மயக்கும் பொய்ம் மகளிரிடத்தே வேட்கை யுற்று வஞ்சக எண்ணங்கள் கலந்த மனத்துடன், எளியனாகிய யான் எதற்காகப் பிறந்தேனோ, அறியேன், எ. று.

     பசுமையான சோலைகளில் குளிர்ந்த நீர்க்காற்றும் நிழலும் செறிவதால் குளிர்ச்சி நிலவுவது பற்றித் “தண்ணளாவிய சோலை” என்றும், தணிகை மலைமேல் பரந்த பெரிய இடம் கண்டு கோயில் அமைந்திருத்தல் தோன்றத் “தணிகைத் தடத்தளாவிய தருமநல் தேவே” என்றும் இயம்புகின்றார். தடம் - பெரிய இடம். அறக் கடவுள் என்பார், “தருமநல் தேவே” என்று சிறப்பிக்கின்றார். பெண்ணளாவிய புடை - உமா தேவியாகிய பெண்ணமரும் இடப்பாகம். இருவகைப் பற்றும் அற்ற பெரியோர்களை, “அற்றவர்” எனவும், அவர்கட்கு இன்ப ஞான அமுதமாய் விளங்குமாறு தோன்ற, “அமுதே” எனவும் இயம்புகின்றார். இசைக்கென்றமைந்த இனிய குரல் கொண்டு இனிக்கப் பேசி ஆடவர் அறிவை மயக்கி அவரது பொருளைக் கவர்வதே நினைவாக வுள்ள பொருட் பெண்டிரைப் “பண்ணளாவிய மொழியினால் மயக்கும் படிற்று மங்கையர்” என்றும், தீயவர் தீயரை விரும்புவ ரென்பதற் கேற்ப, அம்மங்கையரை விழையும் யானும் நெஞ்சக முழுதும் வஞ்சக நினைவுகளே நிறைந்தவன் என்பாராய், “எண்ணளாவிய வஞ்சக நெஞ்சோடு” என்றும், வஞ்சம் புரிதற் கென்றே பிறவி எய்துவ தின்மையால், என் பிறப்புக்குக் காரணமொன்று உளதாகல் வேண்டு மென்பார், “என்செய்வான் பிறந்தேன்” என்றும் முறையிடுகின்றார்.

     இதனால் நெஞ்சம் வஞ்சம் நிறைந்தமை யெண்ணி வருந்தியவாறாம்.

     (9)