439. கான றாவள கத்திய ரளக்கர்
காமத் தாழ்ந்தகங் கலங்குற நின்றேன்
வான மேவுறும் பொழிற்றிருத் தணிகை
மலையை நாடிநின் மலர்ப்பதம் புகழேன்
ஞான நாயகி யொருபுடை யமர்ந்த
நம்ப னார்க்கொரு நற்றவப் பேறே
ஈன னாகியிங் கிடர்ப்படு கின்றேன்
என்செய் வான்பிறந் தேனெளி யேனே.
உரை: ஞானத் தலைவியாகிய உமையம்மையை ஒருபாற் கொண்ட சிவபெருமானுக்கு ஒப்பற்ற தவப் புதல்வனே, வானளாவிய சோலை களையுடைய திருத்தணிகை மலையை நினைந்து நின்மலர் போலும் திருவடிகளைப் புகழாதவனாய், எளியனாகிய யான், நறுமணம் நீங்காத கூந்தலை யுடைய மகளிரின் காமமாகிய கடலில் வீழ்ந்து அறிவு கலங்கி நின்று, இவ்வுலகில் கீழ் மகனாய்த் துன்புறுகின்றேனாதலால், ஏன் பிறந்தேனோ, அறியேன், எ. று.
நெடிதுயர்ந்து இருள்படத் தழைத்து வானம் தெரியாதவாறு நிழல் பரப்பும் சோலைகள் என்றற்கு, “வான மேவுறும் பொழில்” எனப் புகழ்கின்றார். தணிகை மலையை நினைந்த போது, அங்கே எழுந்தருளும் முருகப் பெருமான் திருவடி நினைக்கப்படுதலும் புகழ்தலும் உடனிகழ்தல் பற்றித், “திருத்தணிகை மலையை நாடி நின் மலர்ப்பதம் புகழேன்” எனப் புகல்கின்றார். பக்குவ முற்ற ஆன்மாவுக்குச் சத்தி நிபாதம் உறுவித்து மலபரிபாகத்தில் அருள்ஞானம் வழங்குபவளாதலால், உமா தேவியை, “ஞான நாயகி” என நவில்கின்றார். நம்பன் - சிவன்; யாவராலும் விரும்பப் படுவன் என்பது சொற்பொருள். தேவர்கள் செய்த தவம் காரணமாகப் பிறந்தவனாதலால், முருகனைத் “தவப் பேறு” என்கின்றார். ஈனன் - தாழ்ந்தவன்; இங்குள்ளவன் என்றுமாம். இன்ப வுலகத்தவனாகாது துன்பம் நிறைந்த இவ்வுலகத்துக் குரியவனாய்த் துன்புறுகின்றேன் என்பது கருத்து.
இதனால், மகளிர் காமத்தால் மயங்கி முருகன் திருவடியைப் புகழாமல் ஈனனாய் இடர்ப்படுதல் ஆகாமை நினைந்து முறையிட்டவாறாம். (10)
|