441. ஒன்றார்புர மெரிசெய்தவ ரொற்றித்திரு நகரார்
மன்றார்நட முடையார்தரு மகனார்பசு மயின்மேல்
நின்றாரது கண்டேன்கலை நில்லாது கழன்ற
தென்றாரொடு சொல்வேனெனை யானேமறந் தேனே.
உரை: தோழி, பகைவரது மும்மதில்களை எரித்துச் சாம்பராக்கிய வரும், திருவொற்றியூரை யுடையவரும், அம்பலத்தில் ஆடல் புரிபவருமான சிவனுடைய மகனான முருகப் பெருமானார் பசுமை நிறம் பெற்ற மயிலின் மேல் நின்றாராக, அக்காட்சியைக் கண்ட எனக்கு இடையில் உடை நில்லாமல் நெகிழ்ந்து வீழ்வதாயிற் றென்று யாரோடு சொல்வேன்? என்னை நானே மறந்து போவேன், எ. று.
மனத்தால் ஒன்றாதவர் பகைவராதலால், அத்தன்மையரான திரிபுரத்தசுரரை, “ஒன்றார்” என்கின்றார். இச்சொல் “ஒன்னார்” எனவும் வழங்கும். எரிசெய்தவர் - எரித்தவர். திருக்கோயிலை நகர் என்னும் வழக்குப் பற்றித் திருக்கோயில் கொண்டவரைத் திருநகரார் எனக் கூறுகின்றார். அது நின்ற காட்சி. கலை - உடை. உடை மேல் இடையில் அணியும் ஆபரணத்தை மேகலை என்பதனால் அறிக. நெகிழ்தலை ஈண்டுக் கழலுதல் வாய்பாட்டில் கூறுகின்றார். காதற் காம வயப்பட்ட இளமகளிர்க்குக் காதலன் முன் உடை நெகிழ்தலும் கைசென்று பெயர்த் துடுத்தலும் இயல்பு, “ஊழணி தைவரல் உடை பெயர்த்துடுத்தல்” (மெய்) எனத் தொல்காப்பியர் உரைப்பது காண்க. உடை நெகிழும் அளவிற்கு உணர்விழந்த நிலைமையைப் பெண்மை தடுத்தமையால் யாவரொடும் சொல்லேனாயினேன் என்பாள், “கலை நில்லாது கழன்றதென்று ஆரொடு சொல்வேன்” என உரைத்தாளாகத் தோழி என்னை மறந்தாயோ என்ன, என்னையே மறந் தொழிந்தேன் என்பாளாய், “எனை யானே மறந்தேன்” என விடையிறுக்கின்றாள். “எனை நான் என்பதறியேன் பகல் இரவாவதும் அறியேன், மன வாசகம் கடந்தான் எனை மத்தோன் மத்தனாக்கி” (உயிருண்ணி) என மாணிக்கவாசகர் ஓதுவது காண்க.
இதனால், முருகனைக் கண்களாற் கண்ட காட்சி ஆன்மப் பெண்ணை உலகியல் உடம்பையும் உணர்வையும் இழப்பிக்கும் திறம் காட்டியவாறாம். (2)
|