442. வாரார்முலை யுமையாள்திரு மணவாளர்தம் மகனார்
ஆராவமு தனையாருயிர் அனையாரயி லவனார்
நேரார்பணி மயிலின்மிசை நின்றாரது கண்டேன்
நீரார்விழி யிமைநீங்கின நிறைநீங்கிய தன்றே.
உரை: தோழி, கச்சணிந்த கொங்கைகளை யுடைய உமையம்மையின் மணவாளரான சிவன் பெற்ற புதல்வனாரும் உண்ணாவமுது போன்றவரும் எனக்கு உயிரொப்பவரும் கூரிய வேற்படை யுடையவருமான முருகப் பெருமான் பகைவரும் பணிந்தொடுங்கும் மயிலின் மேல் நின்றாராக, அதனைக் கண்ட எனக்கு நீர் சொரிந்து நின்ற கண்கள் இமைத்தல் ஒழிந்தன; என்னுடைய நிறையும் அழிந்தது; என்ன செய்வேன்! எ. று.
மணவாளர் - திருமணத்தால் ஆட்கொண்டவர்; கணவர். வார்-மார்பிலணியும் கச்சு. Êசிவனே தமது நெற்றி விழியாற் பெற்றமை பற்றி, “மணவாளர்தம் மகனார்” எனப் பிரித்துரைக்கின்றார். வாயால் உண்ணப்படாமல், காட்சியாலும் ஞானத்தாலும் நுகரப்படும் அமுதாதலின், “ஆராவமுது அனையார்” என்கின்றார். அயில்-வேல். நேரார்-பகைவர். மயிலில் வரும் பெருமானைக் காண்பவர் காணா முன் கொண்டிருந்த பகைமை நீங்கி அன்பும் பணிவும் உடையராய் மாறிவிடுதலால், “நேரார் பணி மயிலின் மிசை நின்றார்” எனக் கூறுகின்றாள். நின்றது கண்ட நங்கைக்கு, முருகனது பேரழகு கண்ணளவாய் நில்லாமல் கருதும் கருத்து முற்றும் நிறைந்து இன்பம் செய்தமையால், இமைத்தால் காட்சியின்ப நுகர்ச்சி குன்று மென அஞ்சினமை தோன்ற, “நீரார் விழி இமை நீங்கின” என்று இசைக்கின்றாள். இமை - இமைத்தல்; முதனிலைத் தொழிற் பெயர். காண்ப தெப்போ தென்ற அவாவால் கண்கலுழந்தமையின், “நீரார் விழி” எனக் குறிக்கின்றாள். கண்ட பொருளி லெல்லாம் கருத்தை ஓட விடாது நிறுத்தும் திண்மை நிலை, நிறையாகும். இது பெண்கட்கு இன்றியமையாத சிறப்பென்றற்குச் “செறிவும் நிறையும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் பெண்பாலான” (பொருளி) எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். தன்பால் நிறுத்த நில்லாமல் முருகன்பாற் சென்றமையால் “நிறை நீங்கியது” என இரங்குகின்றார். உம்மை விகாரத்தால் தொக்கது.
இதனால் திருவுலாப் போதரும் முருகன் மயிலின் மேல் நிற்கக் கண்ட நங்கை கண்ணிமைத்தலும் நிறையும் இழந்தமைக் கிரங்கியவாறாம். (3)
|