444. மலைவாங்குவில் லரனார்திரு மகனார்பசு மயிலின்
நிலைதாங்குற நின்றாரவர் நிற்கும்நிலை கண்டேன்
அலைதேங்கின குழல்தூங்கின அகமேங்கின வரைமேல்
கலைநீங்கின முலைவீங்கின களியோங்கின வன்றே.
உரை: தோழி, மலையை வில்லாக வளைத்துக் கொண்ட சிவபிரானார் திருமகனாகிய முருகப் பெருமான் பசுமை நிறம் பெற்ற மயிலூர்தி மேல் நிலை பெற நின்றருளினாராக, அவர் நின்ற நிலையைக் கண்டு இன்புற்ற போது கடலில் நீரலைகள் அசைவின்றிக் தேங்கி நின்றன; குழல்கள் இசைத்த லொழிந்தன; மனமும் எண்ண வெழுச்சியின்றி ஏங்கின; இடையிற் கட்டிய ஆடைகள் நெகிழ்ந்தன; கொங்கைகள் விம்மிப் பருத்தன; எங்கும் இன்பக் களிப்பே மிக்குற்றது, காண், எ. று.
மலையை வளைக்க வுண்டாகிய வில்லையுடைய அரன், சிவன். மலை மேருமலை; “இமைய வில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் உமையமர்த் தொருதலை யிருந்தனனாக” (கலி. 38) எனக் கபிலர் கூறுவர். இமைய மலைத்தொடரில் மேருவும் ஒன்றென அறிக. நின்றநிலை அசையாவாறு நின்றா னென்றற்கு, “நிலை தாங்குற நின்றார்” என வுரைக்கின்றாள். நங்கை. முருகன் நின்றருளிய காட்சி அந்நங்கையின் கண் முதலிய பொறிகளையும் மனம் முதலிய கரணங்களையும் தன்பால் ஈர்த்துக் கொண்ட மையின் கடலின்கண் எழுந்து மோதும் அலைகளின் எழுச்சியும் முழக்கமும் அவளது உணர்வைத் தொடாமையால் “அலை தேங்கின” எனவும், ஆயர் தம் வாய்வைத்தூதும் குழலின் இனிய ஓசை அவள் செவியிற் புகவில்லை யாதலால், “குழல் தூங்கின” எனவும் இயம்புகின்றாள். நுண்ணுணர் வுக்குக் கண்ணும் செவியும் சிறந்த கருவிகளாதல் பற்றிக் கடலலையும் குழலோசையும் இங்கே விதந்து காட்டப்படுகின்றன. “கண்ணினும் செவியினும் திண்ணிதி னுணரும் உணர்வுடை மாந்தர்” (மெய்ப்) எனத் தொல்காப்பியர் கூறுவ தறிக. புறக்காட்சியில் நின்றவள் அகக் கண்கொண்டு சிந்தையை நோக்குபவள், அங்கே எண்ணங்கள் யாவுமின்றி எல்லாம் முருகனது காட்சி நினைவே நிறைந்திருந்தமையின், “அகம் ஏங்கின” என்றும், ஊறுணர்ச்சி யொழிந்தமை விளங்க, “அரையில் கலை நீங்கின” என்றும், முருகன்பால் உண்டாகிய அருட்காத லுணர்ச்சியின் பெருக்கம் கொங்கைகள் விம்முவதால் உணர்ந்து, “முலை வீங்கின” என்றும், தன்னை யறியாத இன்ப மயக்கம் தன்னை முழுதும் விழுங்கிக் கொண்டமையறிந்து, “களி ஓங்கின” என்றும் கூறுகின்றாள்.
இதனால் முருகன் மயில் மேல் உலா வரக் கண்ட நங்கைக் குண்டான மெய்ப்பாடும் உணர்ச்சியும் புலப்படுத்தியவாறாம். (5)
|