445.

    மான்கண்டகை யுடையார்தரு மகனார்தமை மயில்மேல்
    நான்கண்டன னவர்கண்டனர் நகைகொண்டன முடனே
    மீன்கண்டன விழியாரது பழியாக விளைத்தார்
    ஏன்கண்டனை யென்றாளனை யென்னென்றுரைக் கேனே.

உரை:

     தோழி, மானைக் கையில் ஏந்திய சிவபெருமானுக்கு மகனாகிய முருகப் பெருமானை மயில் மேல் வீற்றிருக்கக் கண்டேனாக, அவரும் என்னைக் கண்ணாற் பார்த்தார்; இருவரும் நகைத்துக் கொண்டோம்; உடனே, பக்கத்தே நின்ற மீன் போன்ற விழியை யுடைய மகளிர் எங்கள் இருவரையும் நோக்கி அலர் கூறலுற்றனர்; அது சென்று என் தாயின் செவிக் கெட்டவே அவள் சினமுற்று, “நீயேன் பார்த்தாய்” என்று என்னை வினவினாள்; இதனை என்னென்று கூறுவது காண், எ. று.

     சிவபெருமான் கையின் மானை ஏந்துபவராதலால், “மான் கண்ட கையுடையார்” என்று கூறுகின்றார். திருநாவுக்கரசரும், “மானை யேந்திய கையினர்” (நாகேச்சு) என்று பாடுவது காண்க. மயில் மேல் இருந்து உலா வந்தமை தோன்ற, “மயில் மேல் நான் கண்டனன்” என நங்கை நவில்கின்றாள். மயிலூர்ந்து பலர் காண வந்தமையால் யான் கண்டேன்; இதில் குற்ற மென்னை என்பது புலப்படுமாறு காண்க. நான் கண்ட போது அவனும் என்னைக் கண்டான்; இருவர் கண்களும் காட்சியிற் கலந்தமையால் உள்ளத் தெழுந்த உவகை இளமை காரணமாக நகை தோற்றுவித்தது; நகைத்தோம் என்பாளாய், “நான் கண்டனன் அவர் கண்டனர் நகை கொண்டனம்” என்று இயம்புகிறாள். இருவரும் கண்ணால் கண்டு கொண்டதை அயல் மகளிர் இமையாது பார்த்தனர் என்பாள், “மீன் கண்டன விழாயார்” எனக் குறிப்பாய்ப் புலப்படுத்தி, அலர் கூறலாயினர் என்பாளாய், “அது பழியாக விளைத்தார்” என்கின்றாள். காட்சி மாத்திரையே யன்றிக் கலப்பில்லாத போது பழித்தல் கூடா தென்னும் கருத்தினளாதலால், “அது பழியாக விளைத்தார்” எனவும், கண்டு நகைத்த நிகழ்ச்சியை ஊர் முற்றும் அறியப்பரப்பி விட்டனர் என்றற்கு, “விளைத்தார்” எனவும், அதனைப் பொருளாக எண்ணி அன்னை, சினமுற்று, “ஏன் கண்டனை என்றாள் அனை” எனவும், தெருவில் திருவுலாப் போதரும் திருவுடைக் குமரனைக் கண் படைத்த இளமகளிர் காணாதிருப்பரோ: இவர்களது அறியாமையை என்னென்பது என்பாளாய், “என்னென் றுரைக்கேனே” எனவும் உரையாடுகின்றாள்.

     இதனால், திருவுலாக் காட்சியால் தனக்கு அலர் விளைந்தமையும், அன்னை வெகுண்டமையும் நங்கை தோழிக் குரைத்தவாறாம்.

     (6)