446.

    செங்கண்விடை தனிலேறிய சிவனார்தரு மகனார்
    எங்கண்மணி யனையார்மயி லின்மீதுவந் திட்டார்
    அங்கண்மிக மகிழ்வோடுசென் றவர்நின்றது கண்டேன்
    இங்கண்வளை யிழந்தேன்மயல் உழந்தேன்கலை யெனவே.

உரை:

     தோழி, சிவந்த கண்களையுடைய விடயேறும் சிவபெருமான் அளித்தருளும் மகனாகிய முருகப் பெருமானாரும், எங்கள் கண்ணின் மணிபோல்பவருமாகிய குமாரக் கடவுள், மயில் மேல் இவர்ந்து உலா வந்து அவ்விடத் திருந்தாராக, அவ்விடத்துக்கு மிக்க மன மகிழ்ச்சியுடன் சென்று அவர்நின்ற கோலத்தைக் கண்டேனாக, இங்கே என் இடையிற் கட்டிய உடை நெகிழ்ந்தது போலக் கைவளையும் கழன் றொழிந்தது; கருத்தும் காதல் மயக்கமுற்று வருந்துவதாயிற்று, காண், எ. று.

     சிவன் ஊர்தியாகிய விடை திருமாலாதலால், அவர் இயல்பாகவே சிவந்த கண்ணுடையவ ரென்பது பற்றிச் சிவனைச் “செங்கண் விடைதனில் ஏறிய சிவனார்” எனச் சிறப்பிக்கின்றார். மக்களுடம்பிற் சிறந்த உறுப்புக் கண்ணாக, அக்கண்ணுக்குச் சிறப்பும் ஒளியும் அழகும் தருவது மணியாதலால், எங்கட்கு அந்தக் கண்மணி போல்பவன் முருகன் எனற்கு, “எங்கள் கண்மணி யனையார்” எனப் புகழ்கின்றார். மயின் மீதிவரந்து உலா வந்த முருகனைக் காணும் விருப்பம் உண்ணிரைந்து உந்தவே, உலா வரும் இடத்துக்கு உவப்புடன் ஓடிய திறத்தை, “அங்கண் மிக மகிழ்வோடு சென்று” என்றும், ஏமாற்றம் சிறிது மின்றி அங்கே அப்பெருமான் மயிமேல் நின்ற கோலத்தைக் கண்ணும் உணர்வும் ஒன்றக் கண்டமை விளங்க, “அவர் நின்றது கண்டேன்” என்றும் விளம்புகின்றாள் நம் பெருந்திணை மங்கை. உணர்வு கண்ணொடு கலந்தொன்றி முருகன் காட்சியில் தோய்ந்தமையால், உடம்பு சுருங்கிக் கைவளை கழன்றோடியமையும் கலை நெகிழ்ந்தமையும், மயக்க மிக்கமையுதும் பின்னரே யுணரப்பட்டன என்பாளாய், “இங்கண் வளை யிழந்தேன் மய லுழந்தேன் கலை யெனவே” என்று கூறுகின்றாள். இதனாலும், முருகனது திருவுலாக் காட்சியில் உணர்விழந்த நங்கை உடையும் கைவளையும் இழந்து மயக்குற்றமை தோழிக்கு உரைத்தவாறாம்.

     (7)