448. மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயின்மேல்
நீவீழ்ந்திட நின்றாரது கண்டேனென்ற னெஞ்சே
பூவீழ்ந்தது வண்டேமதி போல்வீழ்ந்தது வண்டே
நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே.
உரை: எனது நெஞ்சமே, திருமகளால் விரும்பப்படும் திருமாலாகிய விடையை ஊர்தியாக வுடைய சிவனுடைய மகனாகிய முருகப் பெருமான் பசுமை நிறம் பெற்ற மயில் மேல் நீ கண்டு காதலிக்க நின்றருளி வரக் கண்டேனாகக் கூந்தலிற் சூடிய பூமாலை துவண்டு வீழ, அறிவு சோர்வுறக் கைவளை கழன்று வீழ, மகளிர் தமது நாவால் அலர் எடுத்துரைக்க, மன்மதனுடைய கரும்பாகிய வில் நாணிலிருந்து மலரம்புகள் என்மேற் பெய்யப்பட்டன, காண், எ. று.
மா - திருமகள். திருமாலுக்குச் சத்தி திருமகளாதலால், அவளால் விரும்பப்படுவது பற்றித் திருமாலை, “மாவீழ்ந்திடு விடை” என வுரைக்கின்றார். சிவனுக்கு ஊர்தியாகும் விடை திருமால் என்பது புராண வரலாறு. வீழ்தல் - விரும்புதல். “தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல்” (குறள்) என்பது காண்க. தான் முருகனைக் கண்டபோது தன்னுடைய நெஞ்சம் முருகன்பாற் காதல் கொண்டது கூறுவாளாய், “நீ வீழ்ந்திட நின்றார் என்றன் நெஞ்சே” என்று நங்கை நவில்கின்றாள். தானும் நெஞ்சமும் கலந்து கண்டு காதலுற்றதால், கூந்தல் அவிழ்தலால் சூடிய பூக்கள் துவண்டு வீழ்ந்தன என்கிறாள். இது “கூழை விரித்தல்” என்னும் மெய்ப்பாடு என்பர் தொல்காப்பியர். நெஞ்சு காதல் மயக்க முறவே அறிவும் சோர்வுற்ற தென்றற்கு, “மதி போயிற்று” எனவும், கைவளை நெகிழ்ந்து வீழ்ந்தமை புலப்பட, “வீழ்ந்தது வண்டு” எனவும், இயம்கிறாள். வண்டு - கையில் அணியும் வளையல். இதனைத் தொல்காப்பியம் “உடம்பு நனி சுருங்கல்” என்று கூறுகிறது. கண்டிருந்த பெண்கள் அலர் (பழிப்புரை) கூறியதை அவர்கள் நாவின் மேல் வைத்து, “நா வீழ்ந்ததும் அலர்” என்கின்றாள். வீழ்த்தது எனற்பாலது வீழ்ந்ததென மெலித்தல் விகாரம். கழை என்றது காமனது கரும்பு வில். காமன் கரும்பு வில்லை வளைத்து மலர் அம்புகளைச் சொரிந்து காம விச்சையைத் தோற்று வித்தான் என்பது கருத்து. பின்னிரண் டடியும் சொற்பின் வருநிலை.
இதனால் முருகன் உலா வரக் கண்ட காட்சியால் உளதாகிய அருட்காதலின் விளைவு கூறியவாறாம். (9)
|