449.

    வெற்றார்புரம் எரித்தார்தரு மேலார்மயில் மேலே
    உற்றாரவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
    பொற்றார்புயங் கண்டேன்றுயர் விண்டேனெனைப் போலே
    மற்றார்பெறு வாரோவினி வாழ்வேன்மன மகிழ்ந்தே.

உரை:

     தோழி, பயனில்லாத அசுரர்களின் மதில் மூன்றையும் எரித்தழித்த சிவன் பெற்றளித்த புதல்வராகிய மேலவர் மயில் வாகனத்தில் உலா வந்தாராக, அவருடைய அழகிய பெரிய முகத்தையும் அதனுட் கிடந்து மிளிரும் நகையையும், பொன் மாலை யணிந்த தோள்களையும் கண்டதும், என் மனத்திற் கிடந்து வருந்திய துயரமெல்லாம் நீங்கினேன்; என்னைப் போல இவ்வருளின்பம் பெற்றவர் வேறு யாவர் உளர்? இனி மன மகிழ்ச்சியோடு இனிது வாழ்வேன், எ. று.

     நல்லறிவாகிய உள்ளீடில்லாதவரை “வெற்றார்” என்பர். சிவஞான மில்லாதாரைச் சமணரொடு கூட்டி, “வெற்றரைச் சமணரோடு விலையுடைக் கூறை போர்க்கும் ஒற்றரை” (ஆலங்) என நாவுக்கரசர் கூறுவது காண்க. வெற்றரென்பது, வெற்றார் என நீண்டது. இளையராயினும் ஞானத்தால் மேம்பட்டவரென்றற்கு முருகனை, “மேலார்” என விளம்புகின்றார். அழகிய முகத்தின்கண் விளங்கும் அருள் நகை நங்கையின் உயிர் தளிர்க்கச் செய்தமையாலும், மாலையணிந்த தோள்கள் மனத்தை மகிழ்வித்தமையாலும், துன்பம் நீங்கி இன்ப மெய்திய திறத்தை, “எழில்மா முகத்துள்ளே நகை கண்டேன் பொற்றார்ப் புயங் கண்டேன் துயர் விண்டேன்” என்றும், இவ்வின்பப் பேறு பிறர் பெறற் கரிது என்பாளாய், “எனைப் போல மற்றார் பெறுவாரோ” என்றும், என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம் என்ற பெருமிதம் உறுவதால், “இனி வாழ்வேன் மனம் மகிழ்ந்தே” என்றும் இயம்புகின்றாள். பொற்றார் - பொன்மாலை. “பொன்மாலை மார்பனென் புதுநலமுண் டிகழ்வானோ” (பழனம்) என்பர் திருநாவுக்கரசர். யான் பெற்ற பேறு இது போல் பிறர் யாரும் பெற்றிரார் என்னும் உலக வழக்குப் பற்றி, “எனைப்போல மற்றார் பெறுவாரோ” என வுரைக்கின்றார். மாணிக்க வாசகரும், “ஐயனெனக் கருளியவாறார் பெறுவார் அச்சோவே” (அச்சோ) என்பது காண்க.

     இதனால், மயில் மேல் உலா வந்த முருகப் பெருமானது காட்சி பெற்ற அருளியல் நங்கை இன்பத்தால் எய்திய பெருமிதத்தை எடுத்தோதியவாறாம்.

     (10)