45. அன்னே எனைத்தந்த அப்பா என்றேங்கி
அலறுகின்றேன்
என்னே யிவ்வேழைக் கிரங்காது நீட்டித்
திருத்தல் எந்தாய்
பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப்
பொருப்பமர்ந்த
மன்னே கலப மயில் மேல் அழகிய
மாமணியே.
உரை: என்னை இவ்வுலகில் தோற்றுவித்த அம்மையே, அப்பா என்று அரற்றி ஏங்கிப் புலம்புகின்றேன்; ஏழையாகிய என் பொருட்டு மனம் இரங்காமல் காலம் நீட்டிப்பதற்குக் காரணம் யாதோ? அறிகிலேன்; எந்தையே, நற்குணக் குன்றமாயவனே, தணிகை மலையில் வீற்றிருக்கின்ற மன்னவனே, பொன்னே, தோகையையுடைய மயில் மேல் இவர்ந்து அழகிய காட்சி வழங்கும் மணி போல்பவனே, எ. று.
பொன்னின் பொற்பும் மாணிக்க மணியின் நிறமும் ஒளியும் கொண்டு தோன்றுவது பற்றிப் “பொன்னே அழகிய மணியே” என்று புகல்கின்றார். உயர்ந்த மங்கலமான குணங்களாலான குன்று போன்றனை என்றற்குச் “சுகுணப் பொருப்பே” என்றும், தணிகையைத் தலைமையாகக் கொண்ட நாட்டுக்குத் தலைவனாதல் விளங்க “மன்னே” என்றும், ஊர்தியாகிய மயில் நீண்டு விரிந்த தோகையுடன் முருகன் இருப்புக்கு இனிய அழகுற்றுத் தோன்றுதலால் “கலபமயில் மேல் அழகிய மாமணியே” என்றும் புகழ்ந்துரைக்கின்றார். திருவருளல்லது பெறும் பொருள் வேறு இல்லாமை தெரிந்து அது வேண்டி அம்மே அப்பா என்று புலம்புகின்றமை புலப்பட, “அன்னே எனைத்தந்த அப்பா என்று ஏங்கி அலறுகின்றேன்” எனவும், வாழ்க்கையின் நிலையாமை நோக்கி, விரைந்து அருள் செய்யாமல் காலம் தாழ்த்துவது கூடா தென முறையிடுபவர், “இவ்வேழைக்கு இரங்காது நீட்டித் திருத்தல் என்னே” எனவும் இயம்புகிறார்.
இதனால் அன்னே அப்பா என ஏங்கி வருந்தும் ஏழையாகிய எனக்கு உன் திருவருளைக் காலம் நீட்டிக்காமல் வழங்குக என வேண்டிக் கொண்டவாறாம். (45)
|