42. திருவருள் விலாசப் பத்து

        அஃதாவது முருகப் பெருமானுடைய திருவருளின் விளக்கத்தை எடுத்துரைப்பதாம். இப் பத்தின்கண் வரும் பாட்டுக்களில் முருகனது திருவருள் இயல்புகளையும் குருவருள் உரை வகைகளையும் சொல்லித் தம்மை இளமைப் பருவத்தேயே அருள் புரிந்து ஆட்கொண்டதை ஒவ்வொரு பாட்டின் ஈற்றிலும் மகுடமாக வைத்து வள்ளற் பெருமான் பாடுகின்றார். “சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே” என்பது அந்த மகுடம்.

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

450.

    ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
        யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
    பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
        பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
    வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
        தேறுமுகப் பெரியவருட் குருவா யென்னைச்
    சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே.

உரை:

     ஆறு முகங்களை யுடைய பெரிய கருணைக் கடலாகியவனே, தெய்வயானையார் கூடி யின்புறுகின்ற மாணிக்க மணி மலையே, அருளரசே, மூன்று கண்களைப் பெற்ற முகத்தை யுடைய பெரிய சுடராய்த் திகழும் சிவத்துக்குள் ஒளிரும் சுடரே, செவ்விய வேற்படையைக் கையில் ஏந்தி வரும் பெருந் தகையே, பிரம ஞானத்தால் சிறப்புறுகின்ற பெரிய குணவான்களின் இதய கமலத்தில் உயர்ந்து திகழும் ஞான விளக்கமே, இன்ப வெள்ளமே, முன்பு எதனையும் தெளிவிக்கும் பெருமை சான்ற அருட் குருவாய்ப் போந்து இளம் பருவத்தேயே எளியேனை ஆட் கொண்ட தேவ தேவனே, உனது திருவருளை என்னென்பேன்! எ. று.

     அருளே நிறைந்த பெரிய கடலொன்று ஆறு முகங்களுடன் உருக்கொண்டது போல்வது விளங்க, “ஆறுமுகப் பெருங் கருணைக் கடலே” என்று போற்றுகின்றார். “கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு” முருகன் தோன்றினானெனக் கந்தபுராணம் கூறுகிறது. உலகின் இருள் நீங்க ஒளி செய்வது ஒருமுகம், ஆர்வலர்க்கு வரம் அருள்வது ஒருமுகம், வேள்வி யோர்ப்பது ஒரு முகம், திசை விளக்குவது ஒருமுகம், களம் வேட்பது ஒருமுகம், வள்ளியொடு நகை யமர்வது ஒருமுகம் என ஆறு முகங்களும் அருள் புரிகின்றன (முருகு) என நக்கீரர் உரைப்பது காண்க. யானை மகிழ்ந்துறைவது குன்ற மென்பதற் கேற்பத் “தெய்வயானை மகிழ் மணிக் குன்றே” எனப் புகழ்கின்றார். செம்மேனியனாதலின், மணிக்குன்றென்பதற்கு மாணிக்க மலை எனப் பொருள் கொள்ளப் பட்டது. ஆதியும் அந்தமு மில்லாத அருட் சோதியாதலால் சிவனை, “முக்கட் பேறு முகப் பெருஞ் சுடர்” எனவும், அவனுக்கு உள்ளிருந்து நெற்றி விழி வழியாக வெளிப்பட்டமை பற்றி முருகனைப் “பெருஞ் சுடர்க்குட் சுடரே” எனவும் இயம்புகின்றார். செம்மை புரிவதே வேற்படையின் செயலாதல் பற்றிச் செவ்வேல் என்பதற்குச் செவ்விய வேல் என்று பொருள் காணப்பட்டது. பிறர் துன்பம் காணாத பேரருளாளனாதலால், “பெருந்தகை” என்கின்றார். பிரமஞானம் பெற்ற பெரியோர்களைப் “பிரமஞானம் வீறுமுகப் பெருங் குணத்தோர்” எனவும், அவர்தம் திருவுள்ளத்தில் பெருஞானப் பேரொளியாய்த் திகழ்வது விளங்கப் “பெருங் குணத்தோர் இதயத் தோங்கும் விளக்கமே” எனவும் உரைக்கின்றார். பிரமப் பொருளை அறியும் ஞானம், பிரம ஞானம். “ஏக மேவாத்வி தீயம் பிரமம்” என்னும் சாந்தோக்கியப் பொருளைத் தெளிவாக வுணர்வது பிரமஞானம்; பிறரெல்லாம் வேறு வேறு கூறுவர். பிரம ஞானம் வீறுதலாவது, தெளிவில்லாத நிலையில் சொல்லாரவாரமும் பொருளாகாத தருக்க நெறியும் மேற்கொண்டு கேட்போர் அறிவைக் கலக்கும் உரைகளைப் பொறுமையுடன் கற்றுணர்ந் தடங்குவது. பெருங் குணம் சான்ற பெருமக்கட் கன்றி இவ்வீறு உண்டாகாமை பற்றிப் “பிரம ஞானம் வீறுமுகப் பெருங் குணத்தோர்” என்று விளக்குகின்றார். வீறு - பிறிதெதற்கு மில்லாத சிறப்பு. “ஆறதேறுஞ் சடையான் அருள் மேவ அவனியர்க்கு வீற தேறும் தமிழால் வழி கண்டவன்” (சண்பை) என்று ஞானசம்பந்தரை நம்பியாண்டார் நம்பி கூறுவதனால் இச்சொற் பொருள் விளக்க முறும். கேட்போர் உள்ளம் ஐயம் திரிபின்றி இனிது விளக்கம் பெற அறிவிக்கும் பேராசிரியன் என்றற்குத் “தேறுமுகப் பெரிய அருட் குரு” எனக் கூறுகின்றார். தேறுமுகம்- தெளிவிக்க வல்ல அருளொளி திகழும் முகம். சிறுகாலை. இளமைப் பருவத்தின் மேற்று. விடியல் இளங்காலைப் பொழுதைச் சிறுகாலை யென்னும் வழக்குப் பற்றி, மிக்க இளம் பருவத்தைச் “சிறுகாலை” என உரைக்கின்றார்.

     இதனால் முருகப் பெருமான் பெரிய அருட் குருவாய் வந்து அறிவருளிய குறிப்புப் புலப்படுத்தவாறாம்.

     (1)