451. கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
கரும்பேயென் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
புண்ணியநன் னிலையுடையோர் கருத்தில் வாய்க்கும்
புத்தமுதே ஆனந்த போக மேயுள்
ளெண்ணியமெய்த் தவர்க்கெல்லா மெளிதில் வந்த
என்னரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
திண்ணியவென் மனமுருக்கிக் குருவாய் என்னைச்
சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே.
உரை: பிறைச் சந்திரனைத் தலைக் கண்ணியாக அணிந்திருக்கின்ற சடையையுடைய கனியே, மூன்று கண்களை யுடைய கரும்பே, மெய்ம்மை யான கருணை புரிந்தொழுகும் வாழ்வை நல்கும் பெருமானே, புண்ணியத்தால் நன்னிலை பெற்ற பெரியோர்களின் திருவுள்ளத்தில் சுரந்தினிக்கும் புதிய அமுதமே, ஆனந்தமான போகமே, உள்ளத்தின் கண் வைத்து எண்ணி யெண்ணிப் போற்றும் உண்மைத் தவம் இயல்வோர் அனைவருக்கும் எளிதில் அருள் ஞானம் வழங்கிய என் அரசே, அறுமுகக் கடவுளாகிய முதல்வனே, வலிதாகிய என் மனத்தை யுருக்கிக் குருமூர்த்தியாய் எழுந்தருளி என்னைச் சிறு பருவத்திலேயே ஆட்கொண்டருளிய தேவ தேவனே, உனது இன்னருளை என்னென்று புகழ்வேன்! எ. று.
கண்ணி - தலையில் அணியும் பூமாலை. “கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ணமார்பில் தாரும் கொன்றை” (புறம்) என்று பாரதம் பாடிய பெருந் தேவனார் பாடுவது காண்க. பிறைமதியும் கண்ணி போல்வதால், “கண்ணி மதி புனைந்த சடை” என்று பரவுகின்றார். “மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளெ டும் பாடி” (ஐயாறு) என்று திருநாவுக்கரசரும் இசைக்கின்றார். கனி போல்வது பற்றிக் “கனியே” என்கின்றார். முக்கட் கரும்பு- மூன்று கணுக்களையுடைய கரும்பு: மூன்று கண்களையுடைய கரும்பு போல்பவன் என்பது கருத்து. பொருளிலார் செய்யும் அருளினும், அப்பொருள் மிக வுடைய செல்வர் செய்யும் அருள் மெய்ம்மையும் அருளப்படுவார்க்கு நல்வாழ்வு தருவது மாதலால், அத்தகைய அருளாளனாதல் விளங்க, “மெய்க் கருணை வாழ்வே” என்று போற்றுகின்றார். வாழ்வு தருபவனை “வாழ்வு” என்பது உபசார வழக்கு. புண்ணியச் செய்கையால் நன்ஞானப் பத்தி நெறியில் நிற்போர்க்கு இதுகாறும் பெற்றிராத இன்பத்தேன் உள்ளத்தே ஊறி மகிழ்விப்பது பற்றிப் “புண்ணிய நன்னிலை யுடையோர் உளத்தில் வாய்க்கும் புத்தமுதே” என்று புகல்கின்றார். “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன” (ஐயாறு) என நாவுக்கரசரும், “கோவிந்தா கோவிந்தா என்றரற்றிக் குளிர்ந்து நாவில் ஊறாத அமிழ் தூற உடல் புளகித் துள்ளமெலாம் உருகினாளே” (பாரதம்) என வில்லிபுத்தூரரும் உரைப்பர். ஊறாத புத்தமுதம் உள்ளத்தே ஊறுதலால் எய்தும் இன்ப நுகர்ச்சியை, “ஆனந்த போகமே” என்று விளக்குகிறார். துன்பமும் போக மெனப்படுதலால், “ஆனந்த போகமே” எனச் சிறப்பிக்கின்றார். வாயாற் பாடியும் ஆடியும் பத்தி பண்ணுவோரினும் மனத்தின் கண் உள்ளக் கமலத்தில் வைத்துச் சிந்திக்கும் உண்மைத் தவ முயல்வோருக்குப் புறத்தே காப்பளித்து அகத்தே திருவருள் ஞானவொளி வழங்கி உறுதி யெய்துவிப்பது கண்டு, “உள் எண்ணிய மெய்த் தவர்க் கெல்லாம் எளிதின் வந்த என்னரசே” என்று கூறுகின்றார். எல்லாப் பொருட்கும் அறிவுக்கும் செயற்கும் காரணனாதலால், “வித்து” என விளம்புகிறார். இளமைப் பருவத்தில் உடம்பின்கண் உறையும் உயிர் பொறி புலன்களின் வழி நின்று அறிவு செயல்களை வளர்த்துக் கோடற் பொருட்டுத் திட்ப முறாது மனம் இயங்கிய வண்ணமிருப்பதால், அப்போது இரக்கமின்றித் தன்னலவுருவாய் உறைத்திருக்கும் மனத்தை நிலைபெற வுருக்கி ஆசிரியனாய் அருள் நெறி கற்பித் தாண்டமை நினைந்து, “திண்ணிய என் மன முருக்கிக் குருவாய் என்னைச் சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே” என்று பரவுகின்றார்.
இதனால், சிறு பருவத்தே திண்ணிதாய் உறைத்திருந்த மனத்தைக் குருவாய்ப் போந்து உருக்கி ஆட் கொண்ட அருள் விளக்கத்தை உரைத்தவாறாம். (2)
|