452.

    நின்னிருதாள் துணைபிடித்தே வாழ்கின் றேனான்
        நின்னையலாற் பின்னையொரு நேயம் காணேன்
    என்னையினித் திருவுளத்தி னினைதி யோதான்
        ஏழையினும் ஏழைகண்டாய் எந்தா யெந்தாய்
    பொன்னையன்றி விரும்பாத புல்லர் தம்பால்
        போகலொழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
    சின்னமளித் தருட்குருவாய் என்னை முன்னே
        சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே.

உரை:

     பொன்னாகிய பொருளை யல்லது பிறபொருள்களை விரும்பாத கீழ்மக்களிடம் உதவி வேண்டிச் செல்லாமல் உன்னுடைய திருவடிகளையே வேண்டிப் போற்றுமாறு ஓர் அறிகுறி தந்து அருட் குருவாய்ப் போந்து சிறு பருவத்தேயே என்னை ஆண்டு கொண்ட தேவ தேவனே, நின்னுடைய திருவடிகள் இரண்டுமே உயிர்த் துணையாம் என்ற நினைவு கொண்டேன்; நின்னைத் தவிரப் பின்னர் ஒருவரையும் நண்பராகிறவர்களாகத் தெரிகிலேன்; நினது திருவுள்ளத்தில் என்ன நினைத்தருளுகிறாயோ; அதுவும் எனக்குத் தெரியாது; எந்தையே, யான் ஏழையாவார் யாவரினும் மிக்க ஏழை காண், என்னை அருளுக, எ. று.

     மண் பெண் பொன் என்ற பொருள் மூன்றின் மேல் உண்டாகும் ஆசைகளில் பொன்னாசை கொண்டு கீழ்மை யுறுபவர் அதனை யன்றிப் பிற இரண்டினையும் அத்துணைப் பெருமை யுடையவையாகக் கருதுவதில்லை யாதலால், அவர்களைப் “பொன்னை யன்றி விரும்பாத புல்லர்” எனப் புகல்கின்றார். புல்லர் - அற்பர்: கீழ் மக்களுமாம். அப்புல்லரிடம் சென்றால் தமது ஆசைக்குரிய பொன்னை வேண்டுவதறிந்து மனத்தே வெறுப்பும் சினமும் கொண்டு ஏசிப் பேசி நாடி வருபவர் மனம் புண்ணுறச் செய்வராதலால், அவரிடம் செல்ல நினையாமல் உன் திருவடியை நினைக்குமாறு செய்தல் வேண்டும் என்பாராய்ப் “புல்லர் தம்பாற் போகலொழிந்து உன் பதமே போற்றும் வண்ணம்” அருளுக என விண்ணப்பிக்கின்றார். “உன்பதமே போற்றும் வண்ணம் சின்னமளித்து” என்பதனால், பொருள் வேண்டிய நிலைமை எய்தும் போது யாவர்பாற் செல்வது என எண்ணித் தடுமாறா வண்ணம், இன்னாரிடம் செல்க, இன்னார்பாற் செல்லற்க என்றொரு குறிப்பு வடலூர் வள்ளற் பெருமானுக்கு இறைவன் அருளியுள்ள செய்தியொன்று தெரிகிறது. இளமையிலேயே இக்குறிப்பு (சின்னம்) எய்தியதால், “சின்னமளித்து அருட்குருவாய் ஆட்கொண்ட தேவதேவே” என்று இயம்புகின்றார். முன்னைத் தவமுடையார்க்கு இறைவன் உள்ளுணர்வாய் நின்று உணர்வருளுவதே யன்றிப் புறத்தே அருட் குருவாய் மக்களுருவிற் போந்து அறிவருளுவன் என்பது சைவநூற் கொள்கை. “சின்னமளித்து அருட்குருவாய் என்னை ஆட்கொண்ட தேவதேவே” என வுரைக்கின்றார். “நானேது மறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்” (ஆனைக்கா) என நாவுக்கரசரும், “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமை” (போற்றி 75-6) என மாணிக்க வாசகரும் உரைப்பன காண்க. மெய்கண்ட தேவர், “தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த” (சிவ. போ) என்பதும் அறிக. மெய்கண்டாரை, “விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன்” (வல்ல.கணேசா) என்று வடலூர் வள்ளலார் பாராட்டுவதையும் நினைவிற் கொள்க நனவிலும் கனவிலும் முருகன் திருவடிகளையே நினைந்த வண்ணம் இருப்பது பற்றி, “நின்னிரு தாள் துணை பிடித்தே வாழ்கின்றேன் நான்” எனவும், நேயரில்லாத வாழ்வு பேய் வாழ்வென்னும் உலகுரை பற்றி எனக்கு நேயமாவது நின்னுடைய அன்புறவே என்பார், “நின்னையலாற் பின்னையொரு நேயம் காணேன்” எனவும் இசைக்கின்றார். உன்னுடைய திருவுள்ளக் கருத்து யாதோ, என் மனக்கருத்தை யுரைத்தேன் என்பாராய், “என்னை இனித் திருவுள்ளத்தில் நினைதியோ” எனச் சொல்லுகின்றார். நீயே எனக்கு நேயம் என யான் நினைப்பது போல என்னை நின் திருவுளத்திற் கொண்டு எனது வாழ்வையும் பொருளாக நினைக்கின்றாயோ எனக் கேட்கின்றார் எனினும் பொருந்தும். எவ்வகையாலும் என்னை நினையா தொழிதல் கூடாதென வற்புறுத்தற்கு, “நான் ஏழையினும் ஏழை கண்டாய் எந்தாய் எந்தாய்” என வுரைக்கின்றார்.

     இதனால், உண்ணின்று உணர்வு கொளுத்தும் இறைவன் அருட் குருவாய்ப் போந்து சிறு பருவத்தே அறிவு தந்தாண்டு கொண்ட திறம் கூறியவாறு.

     (3)