453. கல்வியெலாங் கற்பித்தாய் நின்பா னேயம்
காணவைத்தாய் இவ்வுலகங் காண லென்றே
ஒல்லும்வகை யறிவித்தாய் உள்ளே நின்றென்
னுடையானே நின்னருளும் உதவு கின்றாய்
இல்லையெனப் பிறர்பாற்சென் றரிவா வண்ணம்
ஏற்றமளித் தாய்இரக்கம் என்னே யென்னே
செல்வருட் குருவாகி நாபி னேனைச்
சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே.
உரை: இளம் பருவத்திலேயே அருட் செல்வக் குருவாய் வந்து நாயினேனை ஆண்டு கொண்ட தேவ தேவனான முருகப் பெருமானே, எல்லா வகைக் கல்வியையும் கற்பித்து நின்பால் என் நெஞ்சில் அன்புறவும் உண்டாகச் செய்தாய்: இவ்வுலக வாழ்க்கையும் கானல் போல் நிலையில்லாத தென்பதைப் பொருந்தும் வகையில் எனக்கு உண்ணின்று அறிவித் தருளினாய்; என்னை அடிமையாக வுடைய முதல்வனே, அவ்வப்போது நின் திருவருள் ஞானத்தையும் வழங்குகின்றாய்; அதுவே யன்றி, வாழ்க்கையில் கையி லொன்றும் இல்லையே என்று பிறரிடம் சென்று
இரந்து நில்லாத வண்ணம் உயர்வளித்திருக்கின்றாய்; உனது இரக்கப் பண்புதான் என்னே! எ. று.
செல்வ அருட்குரு என்பதை அருட் செல்வக் குரு என மாறுக; கிடந்தபடியே கொண்டு செல்வத்துட் சிறந்த செல்வமாகிய திருவருளை நல்கும் குரு என்று கூறினும் அமையும். திருவருளே திருமேனியாகக் கொண்ட குரு எனினும் பொருந்தும். கற்றற்குரியவற்றைக் கற்றல் வேண்டும் ஆதலால் “கல்வி யெலாம் கற்பித்தாய்” என்று கூறுகிறார். கற்றாலன்றி இறைவன் நற்றாளைத் தொழும் கருத்து நிலையுறாது என்பர் பெரியோர். “கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக் கற்றார்கள் உற்றோரும் காதலானை . . . செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே” எனத் திருநாவுக்கரசரும், “கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்” (இருக்கு) என ஞானசம்பந்தரும் கல்வியை வற்புறுத்துவது காண்க. இறைவன்பால் அன்புண்டானாலன்றி அவனை நினைந்து வணங்கும் திற முண்டாகாதாயினும், அதுதானும் அவன் திருவருளால் அமைவதாதலால், “நின்பால் நேயம் காண வைத்தாய்” என்று உரைக்கின்றார். உலகியல் இன்பத்தில் தோய்ந்து அது நல்கும் புதுப்புதுக் காட்சிகளில் கலந்து மயங்குவோர்க்கு உலகம் கானல் போல்வதென்பது உணர்வில் எளிதில் தோன்றுவதில்லையாகலின், “இவ்வுலகம் கான லென்றே ஒல்லும் வகை யறிவித்தாய் உள்ளே நின்று” என மொழிகின்றார். முன்னின்று ஒருவர் உரைப்பக் கேட்டு உணரப்படாத தன்மைத்தாதலின், உலகம் கானலென்ற உண்மை உண்ணின்று ஒல்லும் வகை கண்டு உணர்த்துதற்குரிய தென்பது பற்றி, “உண்ணின்று ஒல்லும் வகை அறிவித்தாய்” என வுரைக்கின்றார். உயிர்க்கின்றியமையாத வுண்மை யுணர்வும் உயிர் நிற்றற்குரிய உடம்பும் கருவி கரணங்களும் பொருளும் உலகும் ஆகிய எல்லாம் இறைவன் உடைமையாதலாலும், அவற்றைப் பெற்று வாழ்வதால் உயிரும் அவற்கு அடிமையும் உடைமையு மாதலாலும் இறைவனை, “என் உடையானே” என்று பராவுகின்றார். கருவி கரண வறிவுகட் கெட்டாத நன்மை யறிவைத் திருவருளுணர்வால் நல்குவது கொண்டு, “நின் அருளும் உதவுகின்றாய்” என்கின்றார். “அறிநீர் மையில் எய்தும் அவர்க்கறியும் அறிவருளிக் குறி நீர்மையர்” (இடும்பா) என ஞான சம்பந்தர் நவில்வது காண்க. “கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடியுறும்” (குறள். 1061) என்பதால், இரவா நிலைமை தமக்கு எய்தியதற்கு மகிழ்கின்றாராதலால், “இல்லை யெனப் பிறர்பாற் சென்று இரவாவண்ணம் ஏற்ற மளித்தாய்” எனவும், இதற்கு இரக்கப் பண்பே காரணம் என்பாராய், “இரக்கம் என்னே என்னே” எனவும் இயம்புகின்றார்.
இதனால், இளமையிலே குருவாய் வந்த இறைவன் அருளறிவும் இரந்து வருந்தா ஏற்றமும் தந்தருளியது வியந்துரைத்தவாறாம். (4)
|