454.

    எந்தைபிரா னென்னிறைவ னிருக்க இங்கே
        என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே
    மந்தவுல கினிற்பிறரை யொருகா சுக்கும்
        மதியாமல் நின்னடியே மதிக்கின்றேன் யான்
    இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான்
        எவ்வாறோ அறிகிலே னேழை யேனான்
    சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே
        சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே.

உரை:

     முன்பு எனது இளமைப் பருவத்தேயே திருவுளம் மகிழ்ந்து அருளுருவாகிய குருவாய் எழுந்தருளி என்னை ஆட் கொண்ட தேவ தேவனாகிய முருகப் பெருமானே, எந்தையும் எனக்குப் பிரானும் இறைவனுமாக நீ இருத்தலால் இவ்வுலகில் நமக்குக் குறை யாதும் இல்லை என்ற இறுமாப்புடன் இருக்கின்றதோடு, மந்தத் தன்மை பொருந்திய உலகவருள் எவரையும் ஒரு காசுக்கும் மதிப்பதின்றி நினது திருவடியையே பொருளாக மதித்திருக்கின்றேன்; ஆயினும் அடியவனாகிய என்பால் நினது திருவுளம் எத்தகைய எண்ணம் கொண்டுளதோ, ஏழை யாகையால் யான் அறியேன், எ. று.

     என் நினைவு செயல்களில் மனமகிழ்ச்சி யுற்றாலன்றி உனக்கு என்பால் அருள் சுரக்கும் மனநிலை யுண்டாகாது; ஆனால் நீ திருவுளம் மகிழ்வுற்று எனது இளம் பருவத்திலேயே அருட் குருவாய் எழுந்தருளி அறிவு தந்து என்னை ஆட்கொண்டாய் என்பார், “சிந்தை மகிழ்ந்து அருட்குருவாய் என்னை முன்னே சிறுகாலை ஆட்கொண்டாய்” என்று சொல்லி இன்புறுகின்றார். பிரான் - தலைவன். இறைவன் - நடுநின்று அருள்பவன். எந்தையும் தலைவனும் இறைவனுமாக நீ இருக்கும் போது பிறரை யடைந்து பெறக் கடவது ஒன்றுமில்லை யென்ற உணர்ச்சிப் பெருக்கால் பெருமித முற்று இறுமாந் திருக்கின்றேன் என்ற கருத்து விளங்க, “எந்தை பிரான் என் இறைவன் இருக்க இங்கே என்னகுறை நமக்கு என்று இறுமாப்புற்று” என மொழிகின்றார். “மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார் கழல் வந்துற்று இறுமாந்திருந்தேன் எம்பெருமானே” (ஏசறவு) என மணிவாசகர் உரைப்பது நினைவிற்கு வருமாறு காண்க. இறைவனது உறவையும் அருள் நலத்தையும் எளிதில் உணராமை நோக்கி, உலகவரை “மந்த வுலகு” எனக் குறை கூறுகின்றார். உணர்ந்தொழுகும் மெய்யன்பர்களை விலக்கிப் பேசுவது கருத்தாதலால், “உலகினிற் பிறரை” எனவும், அவர்கள் பொருளாக மதிக்கத் தக்கவரல்ல ரென்பது பற்றி, “ஒருகாசுக்கும் மதியாமல்” எனவும், மதியாமல் மதிக்கத் தகும் மாண்புடையது நின் திருவடி என மதித்து மகிழ்கின்றேன் என்பாராய், “நின்னடியே மதிக்கின்றேன் யான்” எனவும் எடுத்தோதுகின்றார். என்னுடைய எண்ணமும் மதிப்பும் ஒழுக்கமும் திருவுள்ளத்துக்கு ஒத்தனவோ என்று என் நெஞ்சம் அலைகிறதென்பார், “இந்த அடியேனிடத்து உன் திருவுளந்தான் எவ்வாறோ” என்றும், அறிவில்லாமையால் ஏழையாகிய யான் அறியும் வன்மை யுடைய னல்லேன் என்றற்கு, “அறிகிலேன் ஏழையேன் நான்” என்றும் இயம்புகிறார்.

     இதனால் இளம் பருவத்தே ஆட் கொள்ளப்பட்டதனால் எய்திய அருட் பேற்றால் இறுமாப்புற்று உலகிற் பிறரை மதியாத செயலை எடுத்தோதித் திருக்குறிப்பறிய வேண்டியவாறாம்.

     (5)