455.

    மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
        மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
    கூறாத புலைவாய்மை யுடையார் தம்மைக்
        கூடாத வண்ணமருட் குருவாய் வந்து
    தேறாத நிலையெல்லாம் தேற்றி யோங்கும்
        சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
    சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
        சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே.

உரை:

     தன்னியல்பில் மாறுபடுதல் இல்லாத ஞானமாகிய பெருஞ் செல்வத்தில் கலந்து ஒன்றி யிருக்கும் பெருமக்கள் பணிந்து போற்றும் மாமணியே, ஆறு முகங்களைக் கொண்ட மாணிக்க மணியே, நினது திருப்புகழை யோதாமல் புலைச் சொற்களைப் பேசும் வாயுடையவர்களோடு கூடிக் கெடாதவாறு அருட் குருவாய் எழுந்தருளித் தெளிவுறாத நிலைகளை யெல்லாம் தெளிய வுணர்த்தி, உயர்ந்த சிவஞானத்தாற் சிறப்புற்று அப்பொழுது தோன்றிய திகைப் பெல்லாம் போக்கி விலக்கப்படாத ஞான வாழ்வில் நான் வாழுமாறு என்னைச் சிறு பருவத்திலேயே ஆண்டருளிய தேவ தேவனே, உன் திருவருளை என்னென்பேன், எ. று.

     காலத்தாலும் இடத்தாலும் மாறாத இயல்பும் திருவருளாகிய பெருஞ் செல்வப் பயனுமாதலால் சிவஞானத்தை, “மாறாத பெருஞ் செல்வம்” என்றும், அதன்கண் ஒன்றி நிற்கும் பெரியோர்களைச் சிவஞான யோகர் எனக் கூறுவது பற்றிச் “செல்வ யோகர்” என்றும், சிவஞான யோகிகள் விரும்பிப் போற்றும் தெய்வமணியாதல் விளங்க, முருகப் பெருமானைச் “செல்வ யோகர் போற்றும் மாமணியே” என்றும் குறிக்கின்றார். புலைச் சொற்களைப் பேசும் வாயுடைய மக்களைப் “புலை வாய்மை யுடையார்” என்று கூறுகிறார். வாய்மை - ஈண்டு வாயாற் பேசுந் தன்மை குறித்து நின்றது. புலைவாய்மை யுடைவர் கூட்டத்து இடையே இருந்தமையால், அதனினின்றும் நீக்கி யாளும் பொருட்டே இறைவன் அருட்குருவாய் வந்தருளினான் என்பார், “புலைவாய்மை யுடையார் தம்மைக் கூடாதவண்ணம் அருட்குருவாய் வந்து” எனவும், சிவஞானச் செந்நெறியை யுணருமிடத்துத் தத்துவ வகைகளிலும் அவத்தை நிலைகளிலும் அத்துவாத் துறையிலும் நிவிர்த்தி முதலிய கலை வகைகளிலும் பிறவற்றிலும் எளிதில் தெளிய முடியாத வுண்மைகளைத் தெளிவித்தமை விளங்கத் “தேறாத நிலையெல்லாம் தேற்றி” எனவும், இவற்றிற் கெல்லாம் மேலாய் நிற்கும் தசகாரிய வுணர்வாகிய சிவஞானப் பேற்றின்கண் உண்டாகும் மலைவுகளிலிருந்து நீங்கிச் சிவஞான வாழ்வு பெறுவித்தமை புலப்பட, “ஓங்கும் சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச் சீறாத வாழ்விடை நான் வாழ ஆட்கொண்ட தேவ தேவே” எனவும் இயம்புகின்றார். சீறிய வாழ்வு வேண்டப்படாத வாழ்வாதலால் சிவானந்தப் பெரு வாழ்வைச் “சீறாத வாழ்வு” எனச் சிறப்பிக்கின்றார். இதனை இளம் பருவத்தே அருட்குருவாய் வந்து அருளியதை நினைந்து பாடுதலால், “நான் வாழ என்னைச் சிறு காலை ஆட்கொண்ட தேவதேவே” என வுரைக்கின்றார்.

     இதனால் இளம் பருவத்தில் முருகன் அருட் குருவாய் வந்து சிவஞானம் நல்கிய திறம் கூறியவாறாம்.

     (6)